கொரோனா வைரஸூக்கு எதிரான, மலிவு விலை தடுப்பு மருந்தை 2021ஆம் ஆண்டுக்குள் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் தாய்லாந்து, மக்காவ் வகை குரங்குகளின் மீது அந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்திப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் சுமார் 100 நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
அவற்றில் தற்போது எட்டு மருந்துகள் மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் நிலையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இந்தப் பரிசோதனைகளில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முன்னணியில் இருக்கின்றனர். சிம்பன்சி குரங்குகளுக்கு ஏற்படக்கூடிய மாறுபட்ட கிருமி ஒன்றுக்கு எதிரான தடுப்பு மருந்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை அவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் உள்ள தேசிய குரங்குகள் ஆய்வு நிலையத்தில் புதிய தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, முதல் கட்டமாக 13 குரங்குகளுக்கு செலுத்தப்பட்டதை மருத்துவர் சுசிந்தா மலைவிடிஜ்னோன்ட் மேற்பார்வையிட்டார்.
இந்த மருந்து எலிகளுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது வெற்றிகரமாக நிறைவுற்றதையடுத்து, குரங்குகளின்மீது செலுத்தப்படுகிறது.
MRNA எனப்படும் மரபணு தொடர்பான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்காவிந் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தாய்லாந்து பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது.
இதற்கு முன்பு பயன்படுத்தாத இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களும் புதிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு வெளியே, முதன்முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாடான தாய்லாந்தில் இதுவரை 3,000க்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அங்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.