காட்டுக்குள் தேன் எடுக்கச்சென்ற மாணவன் மரக்கிளை உடம்பில் குத்தியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்மதவாச்சி காட்டுப்பகுதிக்குள் இன்றுகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலாவெளி கைலேஸ்வரன் மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேன் எடுக்க சென்ற மூவரில் ஒருவரான குறித்த மாணவன் சுமார் 16 அடி உயரமான மரம் ஒன்றில் பிணமாக கிடந்ததாகவும் 15,54 வயதுடைய உயிரிழந்தவருடன் கூட சென்றவர்கள் காட்டில் வழிமாறிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மாலை மூன்று மணியளவில் மரணவிசாரணை அதிகாரி எம் ரூமி மரணவிசாரணையை மேற்கொண்டதுடன், சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.