நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியுள்ளது.
ஊரடங்கால் திருமண விழாக்களுக்கு செல்ல முடியாததால் மணமக்களை வாழ்த்த முடியவில்லை. இந்த நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த தொழிலாளி புதிய முயற்சியாக உருவாக்கிய கியூ.ஆர். கோடு அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் மூலம் செல்போனிலேயே மணமக்களுக்கு வாழ்த்து கூறுவதோடு இணையதளம் மூலம் மொய் பணமும் செலுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளது வரவேற்றை பெற்றுள்ளது.
திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால் மொய்ப்பண வசூல் செய்ய முடியாமல் திருமண வீட்டாருக்கு இழப்பும் ஏற்பட்டது.
இதனை தவிர்க்க திருப்பத்தூரை சேர்ந்த தொழிலாளி வடமலை சங்கர் என்பவர் புதிதாக சமூக இடைவெளிக்கு உகந்த அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.
அந்த அழைப்பிதழில் கவரில் முன் பக்கம் ‘கியூ ஆர் கோடு’ அச்சிட்டுள்ளார். இதனை நாம் செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் செல்போனில் உள்ள யூ டியூப் மூலம் திருமணம் நடத்தும் பெற்றோர் அல்லது மணமக்கள் தங்களது திருமணம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து, நேரடியாகப் பேசும் வீடியோ வருகிறது.
திருமணம் அல்லது நிகழ்ச்சிகள் முடிந்து அரைமணி நேரத்தில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் நிகழ்ச்சிகளின் பதிவுகளை காணலாம்.
அழைப்பிதழின் உட்பகுதியில் உள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் காணலாம். அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போன் செய்தால், திருமணமான மணமக்களிடம் நேரடியாக வாழ்த்துகளை கூறலாம்.
இணையதளம் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கலாம். மேலும் மொய் பணம் செலுத்துவோர் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள மணமக்களின் வங்கி கணக்கில் கூகுள் பே போன் பே மூலம் மொய் பணம் செலுத்தலாம். இவ்வாறு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த அழைப்பிதழை மாவட்ட கலெக்டர் சிவன் அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரிடம் நேரில் சென்று காண்பித்து செய்முறை விளக்கம் அளித்தார். அழைப்பிதழை உருவாக்கிய வடமலை சங்கரை இருவரும் பாராட்டினார்கள்.