நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிப்பதற்கு தினமும் உடல் இயக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது முக்கியமானது.
ஊடரங்கு காலத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் குறைந்துபோய் இருப்பதால் எதிர்மறை விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக கவலை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் உருவாகும்.
இந்த காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
* வெறும் வயிற்றிலோ அல்லது நன்கு சாப்பிட்ட பிறகோ உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டாம்.
* சாப்பிடும்போது டி.வி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
* சமையலுக்கு கடுகு எண்ணெய், சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், இஞ்சி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். சாலட்டுகளுக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்தது.
* வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை ஒருபோதும் தவறவிட்டுவிடக்கூடாது.
* கடினமான காலகட்டத்தில் மனம் அமைதியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு தியானம் முக்கியமான அஸ்திரமாக அமையும்.
* மனக்குழப்பம் ஏற்பட்டாலோ, தொடர்ச்சியாக மன அழுத்தத்திற்கு ஆளானாலோ கண்டிப்பாக தியானம் மேற்கொள்ள வேண்டும். தியானம் தவிர ஆழ்நிலை மூச்சு சுவாச பயிற்சி, ஆன்மா-உடல்-மனம் சார்ந்த பயிற்சிமுறையை கையாள்வது எதிர்மறை எண்ணங்களை அகற்ற வழிவகுக்கும். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.
* நீரிழிவு நோயாளிகள் சீரான உணவு திட்டத்தை பின்பற்ற வேண்டியது அவசியம். தினமும் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரிகளை கணக்கிட வேண்டும். அதே கலோரி அளவையே தினமும் உட்கொள்ள வேண்டும். அது தேவைக்கேற்ப எடையை குறைக்கவோ, அதிகரிக்கவோ உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் வழிவகை செய்யும்.
* கூடுமானவரை அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், அனைத்து வகையான பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம். கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள். அது ரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பாக வைத்திருக்க உதவும்.
* போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கு மறக்காதீர்கள். சரியான நேரத்தில் தூங்குங்கள். அது தூங்கும் கால அளவை பராமரிக்க உதவும்.
* ஊடரங்கு காலத்தில் மூன்று வேளையும் சாப்பிடும் உணவின் அளவு சீராக இருக்க வேண்டும். ஒரு வேளை அதிகமாக உட்கொண்டுவிட்டு மறுவேளை குறைவாக சாப்பிடக்கூடாது. அது ரத்தத்தில் சர்க்கரை, குளுக்கோஸ் அளவில் ஏற்ற, இறக்கங்களுக்கு வழிவகுக்கும். மேலும் மைக்ரோவாஸ்குலர் சிக்கலையும் தோற்று விக்கும். சரியான நேரத்தில் சரியான அளவு உணவை சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும் வெள்ளை ரொட்டி, சிப்ஸ்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* வறுத்த, கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மைதா, ரவா, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பிற கிழங்கு வகைகள், இறைச்சிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகள் அவசியம்.
* இனிப்பு சுவை அதிகம் கொண்ட கஸ்டர்டு ஆப்பிள், வாழைப்பழங்கள், திராட்சை, மாம்பழம் போன்றவற்றை சாப்பிடுவதையும் தவிர்த்துவிடலாம்.