கொரோனா அபாயத்தின் பின்னர் பொது வாழ்க்கை படிப்படியாக மீட்டெடுக்கப்படும்போது, தனியார் கல்வி வகுப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கூடியிருந்து கற்பதை விட, தொலைதூர கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், விரிவுரைகள் மற்றும் பாடத்துடன் தொடர்புடைய பிரதிகளை அஞ்சல் சேவை மூலம் வீட்டிற்கு அனுப்பலாம் அல்லது பொருத்தமான இணைய அமைப்புகளைப் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும்போது அவசரகால பதில் திட்டமும் இருக்க வேண்டும்.
சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகரிடம் கல்வி கற்பிக்கப்படும் இடம் பொருத்தமானதா என்பதை காண்பித்து, முன்னனுமதி பெற வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மேசைகள், கதிரைகள், கதவு கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுக்கள் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். சோப் அல்லது கிருமிநீக்க திரவம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வகுப்பு கொள்ளவில் 50 வீதமானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் ஒவ்வொரு மாணவருக்குமிடையில் 1 மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும். முகக்கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
தனியார் கல்வி நிலையத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்கள், வினாத்தாள்கள் மாணவர்களிற்கு விநியோகிக்கக்கூடாது.
குளிரூட்டி இல்லாத இடங்களில் கதவு, யன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். குளிரூட்டியுள்ள இடங்களில் வாரத்திற்கு ஒரு முறை காற்று வடிப்பான்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
தனியார் கல்வி நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டதும், இந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென சுகாதார அமைச்சின் வழிகாட்டல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.