இந்தியா – சீனா இடையேயானபிரச்சினையைதீர்ப்பதற்கு 3 ம் நாட்டின் மத்தியஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாஹோ லலிஜன் கூறுகையில்
‘‘இருநாடுகளும் இந்த பிரச்சினையை பேசித்தீர்த்துக் கொள்ளும்’’ என்றார். 3-ம் நாட்டின் மத்தயஸ்தம் ஏதும் தேவையில்லை என சீனா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இருநாடுகள் தொடர்புடைய பிரச்சினையில் 3-ம் நாட்டின் தலையீடு எந்தவிதத்திலும் தேவையில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.
சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்தியா தரப்பில் புகார் கூறப்படுகிறது. அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சீன வீரர்கள் நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கான ஆயத்த நிலையில் இருக்கவும் வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் சீன அதிபர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இதைத் தொடர்ந்து இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
ஆனால் அமெரிக்காவின் தலையீடு தேவையில்லை என சீனா மற்றும் இந்தியா இரு நாடுகளும் ஏற்கெனவே தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.