திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் சிறுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ரசிக விஜயரத்ன தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று சிறுமியின் பிரேத பரிசோதனை இடம் பெற்ற நிலையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சிறுமியின் உடற்பாகங்கள் பெறப்பட்டதாகும் அவர் கூறினார்.
கடந்த 27ஆம் திகதி சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு- சிறுனிவாசபுரம் பகுதியில் இரத்தினசிங்கம் தனுஷ்கா (12வயது) என்ற சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சிறுமிக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுமியின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தென்படாமையினால் சிறுமியின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சட்ட வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.