குவார்ட்டர் போத்தலில் உள்ள சரக்கை உள்ளே இறக்கி போதையில் தள்ளாடுபவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால், போதையில் ஒரு குவார்ட்டர் போத்தலையே வயிற்றுக்குள் இறக்கிய குடிமகனை பார்த்திருக்கிறீர்களா?.
இது அப்படியான குடிமகன் பற்றிய செய்தி.
தமிழகத்தின் நாகையை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (29). மது பிரியரான இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டு மாதங்கள் மது குடிக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பல நாள் ஆசையைத் தீர்த்து, மது அருந்துவதையே முழுநேரப் பணியாகக் கருதி கடந்த சில நாட்களாக செயல்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி நிறைய மது போத்தல்கள் வாங்கி அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதனால் பக்கிரிசாமிக்குப் போதை தலைக்கேறியது. மீதமுள்ள ஒரு குவார்ட்டர் போத்தலை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியாமல் தனது ஆசன வாய்க்குள் சொருகியுள்ளார். படுத்து புரண்டு உருண்டு உறங்கியுள்ளார். இதில் பாட்டில் முழுவதும் வயிற்றுப்பகுதிக்குள் சென்றுவிடவே வயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்து உயிருக்குப் போராடியுள்ளார்.
இதையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர், நாகை மாவட்ட தலைமை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பக்கிரிசாமி உடலை ஸ்கான் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஒரு முழு போத்தல் பக்கிரிசாமி வயிற்றுப்பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் பக்கிரிசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் இனிமா கொடுத்து 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின், முழு போத்தலையும், அவருக்கு காயமின்றி வெளியில் எடுத்து பக்கிரிசாமியைக் காப்பாற்றியுள்ளனர்.