ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு எடுத்துள்ள தீர்மானத்தை நிராகரிக்கின்றோம். அதனை ஏற்கமுடியாது. சட்டரீதியாக சவால்களை எதிர்கொள்வோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடும் நபர்கள் மற்றும் அக்கூட்டணிக்கு ஆதரவு வழங்குபவர்கள் என 99 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் ஐ.தே.கவில் வகித்த பதவிகளில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பிரதித் தலைவர் பதவியில் இருந்து சஜித் தூக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார,
” ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் எம்முடனேயே இருக்கின்றனர். செயற்குழு உறுப்பினர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானவர்கள் எமது அணியில் இருக்கின்றனர். செயற்குழு வழங்கிய அனுமதியின் பிரகாரமே புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.
எனவே, தன்னிச்சையான முறையிலேயே எம்மை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் நிராகரிக்கின்றோம். சவாலுக்குட்படுத்தப்படுமானால் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
ஐக்கிய தேசியக்கட்சியினர் என தற்போது கூறிக்கொள்ளும் சிறு குழுவினருக்கு அரசாங்கத்துடன் ‘டீல்’ இருக்கின்றது. இதன்காரணமாகவே எமது காலை வாருவதற்கு முயற்சிக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இந்த குழுவே எமக்கு எதிராக செயற்பட்டு, வெற்றியை தடுத்தது.
அதேவேளை, உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களை மிரட்டும் செயலில் ரணில் தரப்பு ஈடுபட்டுள்ளது. எமக்கு ஆதரவு வழங்கினால் பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். எனவே, இப்படியான “டீல்காரர்களுக்கு” மக்கள் பாடம் புகட்டவேண்டும்.
இவர்களிடம் இருந்து கட்சியையும், தலைமையகத்தையும் பாதுகாக்கவேண்டும். அதனை நாம் செய்வோம்.” – என்றார்.