வெட்டுக்கிளி தாக்குதல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை தற்போது தாக்க ஆரம்பித்துள்ளது. தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வரும் வாய்ப்பில்லை என்கிறது தமிழக வேளாண் துறை. ஆனால், தமிழ் இலக்கியத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் விரிவாகவே இருக்கின்றன.
வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து புதன் கிழமையன்று அறிக்கை வெளியிட்ட தமிழக வேளாண்துறை தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வருவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது.
ஆனால், தமிழ் இலக்கியங்களில் வெட்டுக் கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் நிறையவே இருக்கின்றன. 1976ல் கி. ராஜநாராயணன் எழுதி வெளிவந்த கோபல்ல கிராமம் நாவல், இம் மாதிரி ஒரு தாக்குதலை விரிவாகவே விவரிக்கிறது.
“ஸ்ரீனி நாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக் கொண்டிருந்தன.
அவைகளை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலைகூட இல்லை!
அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண், ஒருச்சாண் என்றிருந்தது! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது; கேள்விப்பட்டதும் கிடையாது.
எங்க்கச்சி பயந்துபோய் புருஷனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள். ‘என்ன இது! உலகம் அழிவு காலத்துக்கு வந்துவிட்டதா?
உலகம், பிரளயம் வந்து அழியப்போகும்போது மழை பெய்யுமாம்; நாள் கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம். அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால், யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே?’
அவர் மனைவியை உதறிவிட்டு கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார். செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்றுகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.
அவருக்குத் தொண்டையை அடைத்தது. எந்தப் பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள். கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைப்போலவும் காட்சி தந்தது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக் குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குரல் கேட்டது. காடுகளில், விளைந்த கம்மங் கதிர்களுக்குக் காவலாக பரண் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் திகைத்து, இறங்கிவந்து விட்டில்களை விரட்டிப்பார்த்தார்கள்.
கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப்பார்த்தார்கள். கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில், பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது! ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள். அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோலக் கேட்டது.
எதைக் கொல்லுவது; எப்படிக் கொல்வது? விட்டிலைப் பிடித்தால், ரம்பம் போன்ற அதன் பின்னத்தங் கால்களால் உதைத்துக் கையை ரணமாக்கி விடுகின்றன. நல்ல மனசு திரவத்தி நாயக்கர் அவருடைய புஞ்சையில் காவல் இருந்தார். கதிர் நன்றாக விளைந்திருந்தது. அவருக்கு மட்டுமல்ல, அந்த வருசம் கிராமம் பூராவுமே அப்படி. நாளைக்குக் கதிரைப் பிரக்கணும் என்று நினைத்திருந்தபோது இப்படி ஆகிவிட்டது”
பிறகு, இந்த விட்டில்கள் வந்த மாதிரியே போய்விட்டதாகக் குறிப்பிடுகிறார் கி. ராஜநாராயணன். பிரிட்டிஷ் ஆட்சி கிராமங்களுக்குப் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கோபல்ல கிராமம் குறிப்பிடுகிறது.
இதேபோல, சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலில், மதுரையில் நடந்த வெட்டுக்கிளி தாக்குதல் பற்றி குறிப்பிடப்படுகிறது. மதுரையை சொக்கநாத நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
“சொக்கநாதன் காலத்தில் வானில் தூமகேது தோன்றியது. நிமித்தகர்கள் அதைச் சொல்லியே மக்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தனர். அதற்கேற்றார்போல ஒரு மாதத்தில் நம்ப முடியாத பேரழிவு விவசாயத்தில் நேர்ந்தது. வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்துவந்தன. ஒவ்வொன்றும் சோளக்கதிர் அளவு பெரிதாக இருந்தது. மேகக்கூட்டங்கள் போல வந்து அப்படியே செடிகொடிகள் பயிர்களின் மீது மொய்த்தன. நிலமெங்கும் பெருமழை அடிப்பதுபோல நெறுநெறுவென்று சப்தம். அவை பறந்தவுடன் இலைகளற்ற வெறுந்தண்டுகளே எஞ்சின. இரண்டு நாள் படைபடையாகத் தெற்கு நோக்கிச் சென்றன. நாடே பசுமையற்று மொட்டையாகப் போய்விட்டது. மாசி மாதம் கதிரடிப்புக் களங்களில் புழுதி பறந்தது” என இந்த நிகழ்வைக் குறிப்பிடுகிறார் சு. வெங்கடேசன்.
ஆனால், இது கற்பனையாக எழுதப்பட்ட நிகழ்வல்ல. ஜே.எச். நெல்சன் எழுதிய The Political History of Madura Country புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது. மதுரை நாயக்க வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான திருமலை நாயக்கருக்குப் பிறகு இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆட்சி செய்தார். அவருக்கு அடுத்து ஆட்சி செய்தவர் சொக்கநாத நாயக்கர். இவர் மதுரை ராஜ்ஜியத்தை 1659லிருந்து 1682வரை ஆட்சி செய்தார்.
அதில் 1662ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த பயங்கரங்களை இவ்வாறு விவரிக்கிறார் ஜே.எச். நெல்சன்.
“1662ஆம் ஆண்டு மதுரை வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை சந்தித்ததால் மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். பல குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தன. ஓநாய்களும் கரடிகளும் புலிகளும் காட்டை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிந்தன. சில நேரங்களில் இவை தலைநகருக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் சுற்றித் திரிந்தன. பலர் திடீரென வெளிப்படையான காரணங்கள் ஏதுமின்றி இறந்துபோனார்கள். முன்பு அறிந்திராத பல வகையான பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி பொறுத்துக்கொள்ள முடியாத துர்நாற்றத்தைப் பரப்பி காற்றை மாசுபடுத்தின இவை மக்களைக் கடித்து பொறுக்க முடியாத வலியை ஏற்படுத்தின. காலரா பரவியதால் ஒரே குடும்பத்தில் பதினைந்து நாட்களில் ஏழு பேர் இறந்துபோனார்கள்.”
நாட்டாரியல் வரலாற்றாய்வாளரா ஏ.கே. பெருமாள், மதுரை, திருவிதாங்கூர் பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதல்கள் இருந்திருக்கின்றன என்கிறார்.
“17ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மக்கள், வெட்டுக்கிளி தாக்கியதால், வரியைக் குறைக்க வேண்டுமென மகாராஜாவுக்கு விண்ணப்பம் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அதேபோல பில்லுகட்டி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது அவர்கள், மதுரையைச் சேர்ந்தவர்கள் என்றும் வெட்டுக்கிளி தாக்குதலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி நகர்ந்ததாகவும் அவர்கள் கூறினார்கள். இது நடந்தது 18ஆம் நூற்றாண்டு” என்கிறார் ஏ.கே. பெருமாள்.
அவர் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறார். அதாவது இந்த பில்லுகட்டி நாயக்கர் சமூகத்தினர், வெட்டுக்கிளி தாக்குதலைச் சமாளிக்க வயல்களில் பரண்களைக் கட்டி வௌவால்களை வளர்த்ததாக கூறினார்கள் என்றும் தெரிவிக்கிறார்.