அப்பலோ வைத்தியசாலை அண்மையில் அதிகமாக ஊடகங்களில் பேசப்படும் ஒரு வைத்தியசாலையாக இருக்கின்றது. குறிப்பாக கடந்த 3 மாதகாலமாக அப்பலோ வைத்தியசாலை ஊடகங்களில் அதிகமாக அடிப்பட்டுகொண்டுதான் இருக்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 5ஆம் திகதி இரவு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாக அப்பலோ வைத்தியசாலை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை அவரை மன்னார்குடி தரப்பினரை தவிர்த்து வேறு யாரும் நெருங்க முடியாமல் இருந்தது.
இந்த இடைப்பட்ட 80 நாள் காலப்பகுதியில் வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பது…? மன்னார்குடி தரப்புக்கும் அப்பலோ வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும்.
மேலும், முதலமைச்சர் மரணம் தொடர்பில் இன்றளவிலும் பாரிய சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்து ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.
மேலும், முதலமைச்சர் மரணித்து சிறிது காலத்தில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல்களும், அரசியல் காய்நகர்த்தல்களும் தமிழகத்தை பரபரப்படைய செய்துள்ளது.
இவையே முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தை வலுபெற செய்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், முதல்வரின் மரணம் தொடர்பில் ஒரு தரப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணையை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அப்பலோ வைத்தியசாலையின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவுகளை வெளியிடுமாறு ஒரு தரப்பினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். ஒரு தரப்பினர் முதல்வரின் உடலை தோண்டி மீண்டும் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான அனைத்து கோரிக்கைகளுக்கும் மத்திய அரசும், மன்னார்குடி தரப்பும், அப்பலோ வைத்தியசாலையும் இன்றளவில் மௌனம் காத்து வருவதானது மேலும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே அண்மையில் அப்பலோ வைத்தியசாலையின் கணினிகள் லெஜ்ஜியன் குழுவினரால் ஊடுறுவப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த கணினி ஊடுறுவல் கதையானது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என தமிழக அரசியல் அவதானிகளும், சமூக ஆர்வலர்களும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் பின்னணியில் பாரிய அரசியல் சதி இருப்பதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்று ஒரு பாரிய அரசியல் அமைப்பாக மாற்றம் பெற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக தலைமைத்துவத்தில் ஒரு பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை மன்னார்குடி தரப்பு இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக மக்கள் ஆதரவையும், மற்றைய அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலான திட்டங்களையும், காய்நகர்த்தல்களையும் மன்னார்குடி தரப்பும், சசிகலாவும் முன்னெடுத்துள்ளதாகவும் தமிழக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், முதலமைச்சரின் மரணம் தொடர்பில் புலனாய்வு பிரிவின் விசாரணையை கோரியுள்ளனர். இது மன்னார்குடி தரப்புக்கு பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த கோரிக்கை வலுப்பெற்று புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுக்குமாக இருந்தால் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மன்னார்குடி தரப்பினரின் கனவை குழிதோண்டி புதைக்கவேண்டி வரும்.
எனவே, இதில் இருந்து தப்பித்துகொள்ளும் நோக்கில் அப்பலோ வைத்தியசாலையும், மன்னார்குடி தரப்பும் இணைந்து இந்த கணினி ஊடுறுவல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வேளை புலனாய்வு விசாராணையின் போது சிகிச்சை அறிக்கைகளை கோருவார்களாக இருந்தால், அதனை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டும்.
அவ்வாறு சிகிச்சை அறிக்கை சமர்பிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என அப்பலோ மற்றும் மன்னார்குடி தரப்பு அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், புலனாய்வு விசாரணையின் போது சிகிச்சை அறிக்கையை கோருவார்களாக இருந்தால், அது கணினி ஊடுறுவலின் போது அழிந்து விட்டதாக தெரிவித்து தம்மை பாதுகாத்துகொள்ளும் ஒரு திட்டமாக இந்த ஊடுறுவல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும், அப்பலோ வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பது..? மேற்குறிப்பிட்டது போல வைத்தியசாலை நிர்வாகத்திற்கும், மன்னார்குடி தரப்பினருக்கும் மட்டுமே தெரியும் என்பது நிதர்சனம்.