அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது மரணமடைந்த கருப்பின நபருக்கு ஆதரவாக தெற்கு லண்டன் தெருக்களில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஜோர்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர்.
ஆனால் தமக்கும் அந்த குற்றத்திற்கும் தொடர்பில்லை என ஜோர்ஜ் ஃப்ளாயிட் விளக்கமளித்தும், கைது செய்வதிலையே குறியாக இருந்துள்ளனர் பொலிசார்.
இந்த நிலையில், பொலிசார் ஒருவர் தமது கால் முட்டியால் ஜோர்ஜ் ஃப்ளாயிட்-ன் கழுத்தில் அழுத்தி சுமார் 8 நிமிடங்கள் வரை கைதின் போது சித்திரவதைக்கு உள்ளாக்கினார்.
இதில் ஏற்பட்ட இதயம் தொடர்பான பிரச்சனைகளால் ஜோர்ஜ் ஃப்ளாயிட் மரணமடைந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பொலிசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் முக்கியமான பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்போது கொலை வழக்கை எதிர்கொள்கிறார்.
தற்போது இந்த விவகாரம் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரமாக வெடித்துள்ளது.
கலவரக்காரர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையிலேயே தெற்கு லண்டன் தெரு வீதிகளில் பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஜோர்ஜ் ஃப்ளாயிட்கு நேர்ந்தது தங்களுக்கும் நேரலாம் எனவும், இந்த விடயத்தில் பிரித்தானியா ஒன்றும் அப்பாவியல்ல எனவும் பதாகைகளில் குறிப்பிட்டிருந்தனர்.