சுவிஸ் இளைஞர் ஒருவர் தமது காதலியை சந்திக்க குட்டி விமானம் ஒன்றை பதிவு செய்த நிலையில், திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே விமான சேவையை பயன்படுத்த அனுமதி என ஜேர்மனி தெரிவித்துள்ளது.
இதனால் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும்வரை அவர் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியை சேர்ந்த அந்த 26 வயது இளைஞருக்கு ஜேர்மனியின் Düsseldorf பகுதியில் வசிக்கும் காதலியை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இரு நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகள் தற்போது காதலர்களுக்காக தளர்த்தப்பட்டுள்ளதால், அந்த இளைஞர் உடனடியாக குட்டி விமானம் ஒன்றை பதிவு செய்து பயணத்திற்கு தயாராகியுள்ளார்.
மார்ச் தொடக்கத்தில் இருந்தே தமது காதலியை சந்திக்கவில்லை என கூறும் அவர், தாம் இன்னாரை காதலிப்பதாகவும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கூறி கையெழுத்திட்ட சுய அறிவிப்புடன் சூரிச் விமான நிலையத்திற்கு வியாழனன்று சென்றுள்ளார்.
ஆனால் அங்கே அவருக்கு அந்த பேரிடி காத்திருந்தது. ஜேர்மனியில் தற்போதைய சூழலில், திருமணமான தம்பதிகள் மற்றும் பதிவு செய்து கொண்டு உறவில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே அனுமதிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பயண அனுமதியும் மறுத்துள்ளனர். இதில் கடும் ஏமாற்றமடைந்த அந்த இளைஞர்,
ஜேர்மனியில் தம்மை அனுமதிக்க மறுப்பதன் காரணம் தமக்கு புரியவில்லை எனவும், எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதாக கூறியது பொய்யா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து சுவிஸ் மற்றும் ஜேர்மன் அதிகரிகளுக்கு முறைப்படி காரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அவர்கள், விமான சேவைக்கு அனுமதி இல்லை எனவும், தரைவழி செல்லலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் தற்போது அந்த இளைஞர், விமான சேவைகள் அனுமதிக்கப்படும் வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
காதலர்கள் எப்போதும் போன்று விமானம் மூலம் ஜேர்மனியில் நுழைய தற்போதைய சூழலில் முடியாது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் செய்வதன் மூலம் நோய் மேலும் பரவும் அபாயத்தை குறைக்க ஜூன் 15 வரை விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய காவல்துறை தெரிவித்துள்ளது.