பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 12-ந்தேதி மகா தீபத்திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திகை மாதம் நேற்றோடு முடிவடைந்து மார்கழி மாதம் பிறந்தது. மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் சாமிக்கு தங்க கவசம், அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் சன்னதியில் உள்ள நவக்கிரக சன்னதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மார்கழி மாதம் பிறப்பையொட்டி நேற்று அதிகாலையில் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீகில்லாவரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் மற்றும் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்கள் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தொடர்ந்து அம்மனை மலர்களால் அலங்கரித்து வீதி உலாவும் நடந்தது.
இதேபோல கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீகில்லாசீனிவாச பெருமாள் கோவில், ஸ்ரீகோதண்டராமர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
போளூர் பட்டாபிராமர் மந்திராலயத்தில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. வாசவி பள்ளி மாணவ- மாணவிகள் அதிகாலையில் கோவிலுக்கு வந்து திருப்பாவை பாடல்கள் பாடினர்.
போளூர் சுயம்பு லட்சுமிநரசிம்ம சுவாமி மலைக் கோவிலில் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
இதேபோல போளூர் அச்சுதானந்த பஜனை மந்திராலயம், பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.