ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்க மறுத்து கட்சியின் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேராவிற்கு எதிராக இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
மைத்திரியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அண்மையில் சனத் நிசாந்த பகிரங்கமாக கூறியிருந்தார்.
இது தொடர்பில் விசாரணை நடத்த கட்சியின் ஒழுக்காற்றுக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் திகதி கட்சித் தலைமையகத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் சனத் நிசாந்தவிற்கு கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சனத் நிசாந்த பெரேரா தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைவரை விமர்சனம் செய்தமைக்கு விளக்கம் அளிக்குமாறு கட்சி நிர்வாகம் சனத் நிசாந்தவிடம் கோரியதாகவும் அதற்கு அவர் உரிய பதிலளிக்கவில்லை எனவும், இதனால் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர்ஈ பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டவர்கள் எனவும் அவர்களினால் தமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட முடியாது எனவும் சனத் நிசாந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை குறித்து தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.