பல நாட்கள் இரவில் தூங்காமல் விழித்திருந்து வேலை செய்து கொண்டிருப்பது இதயச் செயல்பாட்டுக்கு நல்லது இல்லை என்று எச்சரிக்கிறது ஒரு ஆராய்ச்சி.
தீயணைப்புப் படையில் பணி புரிபவர்கள், அவசர சிகிச்சை உதவிப் பிரிவு, மருத்துவ துறையில் வேலை செய்பவர்கள் போன்றோர் அதிக மன அழுத்தம் தரும் வேலையில் 24 மணி நேரம் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும். அதனால் போதிய அளவு உறக்கம் இருக்காது.
எட்டு அல்லது பத்து மணி நேர வேலை நேரம் தாண்டியும் ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்யும் பெரும்பான்மையினருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய்கள் வர அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார் ஜெர்மனிய ஆய்வாசிரியர் டானியல் க்விட்டிங்.
இந்த ஆராய்ச்சிக்காக க்விட்டிங் 20 ஆரோக்கியமான ரேடியோலஜிஸ்டுகளை (Radiologist) வரவழைத்தார். இவர்களின் வயது 31 அதில் 19 ஆண்கள் மற்றும் ஒரே ஒரு பெண் இருந்தார்கள். ஷிஃப்டில் பணிபுரிவதற்கு முன்னரும் ஷிஃட்ப் முடிந்ததும் என ஒவ்வொருவருக்கும் சி எம் ஆர் (cardiovascular magnetic resonance) எனும் பரிசோதனை இரண்டு முறை செய்யப்பட்டது.
தினமும் அவர்கள் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கினார்கள். அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. அதன் பின் ரத்த அழுத்தப் பரிசோதனையும் இதயத் துடிப்பும் பரிசோதிக்கப்பட்டது.
அந்த இரண்டு பரிசோதனை முடிவுகளிலும் தூக்கமின்மையால் அனேக பிரச்னைகள் தோன்றுவதை நேரடியாகவே பார்த்தார்கள். சரிவர தூங்காமல், நீண்ட நேர உழைப்பில் ஈடுபட்டிருக்கும் போது உடல் இயல்பாகவே சோர்வடைகிறது. தங்களுடைய சொந்தப் பிரச்னைக்காக வேலை நேரத்தை நீட்டிப்பவர்கள் வேறு வகையில் உடல் பிரச்னைகளில் சிக்கி அவதியுறுவார்கள், ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து உடலுக்கு போதிய அளவு ஓய்வு கொடுப்பதே நல்லது என்று முடிகிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்வறிக்கை சிகாகோவில் உள்ள ரேடியோலாஜிகல் சொசைட்டி ஆஃப் நார்த் அமெரிக்கா ஆர்எஸ்என்ஏ (RSNA) வருடாந்திர கூட்டத்தில் வெளியிடப்பட்டது.