சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அனாதையாக கிடந்த 72 லட்ச ரூபாயை இளம்பெண் ஒருவர் நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ள செயலிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சுவிஸின் பேசில் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 22 வயதான இளம்பெண் ஒருவர் நடந்துச் சென்றுள்ளார்.
அப்போது, சாலை ஓரமாக கிடந்த பொட்டலத்தை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக 50,000 பிராங்க்(72,36,164 இலங்கை ரூபாய்) இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர், அங்கு சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லாததால் பணத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பொலிசாரை சந்தித்த அப்பெண் பணம் முழுவதையும் ஒப்படைத்துள்ளார். இளம்பெண்ணின் நேர்மையை கண்டு வியந்த பொலிசார் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும், பணத்தின் உரிமையாளர் தேவையான அடையாளங்களை கூறிவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் நேற்று வெளியிட்டுள்ள தகவலில், ‘பணத்தை ஒப்படைத்த பெண்ணிற்கு அப்பணத்தில் 10 சதவிகிதம் பரிசாக வழங்கப்படும்.
மேலும், சுவிஸ் நாட்டு சட்டப்படி பணத்தின் உரிமையாளர் அடுத்த 5 ஆண்டுகளில் பணத்தை பெறாவிட்டால், அது இளம்பெண்ணிற்கு சென்றுவிடும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.