கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ, நகுலுடன் நாரதன், மற்றும் தலைவன், கரையோரம் ஆகிய படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது ஷக்தி ஜோடியாக ‘7 நாட்கள்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். நிகிஷா பட்டேல் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
“நான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பெண். எனது மூதாதையர்கள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனது சித்தி கேரளாவில் இருக்கிறார். சிறுவயதிலேயே எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தது. இதற்காக மாடலிங் செய்தேன். அழகி போட்டிகளில் கலந்துகொண்டேன். நடிப்பு பயிற்சியும் எடுத்தேன்.
இந்தி படத்தில் அறிமுகமாவது கனவாக இருந்தது. இதற்காக இந்தியா வந்து வாய்ப்பு தேடினேன். அப்போது எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் தயாரான புலி படத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அழைத்தார். தென்னிந்திய மொழி படங்கள் வேண்டாம் என்று சொல்லி அதை மறுத்தேன். ஆனாலும் அவர் பிடிவாதமாக வற்புறுத்தி அதில் நடிக்க வைத்து விட்டார். ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது.
அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் வரவில்லை. என்னை ஒதுக்கினார்கள். சிறிய படங்களில் மட்டுமே நடித்தேன். பல வருட போராட்டத்துக்கு பிறகு இப்போது நல்ல படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தமிழில் 7 நாட்கள் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. இந்த காலத்தில் நிறைய பேர் திருமணம் செய்து கொள்வதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு திருமண பந்தம் தேவை இல்லை என்பது எனது கருத்து. திருமணம் செய்த அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
2030-ம் ஆண்டு, நாட்டில் திருமண முறை என்பதே இருக்காது. தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வார்கள். நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆனால் எனக்கு பிடித்த பையனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வேன். எல்லோரையும் சிரிக்க வைக்கும்படி பேசும் ஆண்களை எனக்கு பிடிக்கும்.
கல்லூரியில் படித்தபோது அழகான ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலித்த அனுபவம் இருக்கிறது. ஆனால் இப்போது அழகு பெரிய விஷயம் இல்லை. அதையும் தாண்டி வேறு சில குணங்கள் ஆண்களுக்கு தேவை என்று உணர்ந்து இருக்கிறேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை.”
இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறினார்.