நாம் அன்றாடம் வீட்டில் பாவிக்கும் நுளம்புச் சுருள் ஒன்றின் புகை சிகரெட் வகைகளுக்கு அமைய 75 தொடக்கம் 137 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானவை என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உட்புற காற்று மாசுபடுதலினால் (indoor air pollution) ஒரு வருடத்திற்கு உலகளாவிய ரீதியில் 43 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
எமது வாழ்நாளில் நாம் அதிகமாக உட்புற காற்றை சுவாசிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகிறது, உட்புற காற்று எனும் போது, அது வீட்டை மாத்திரம் குறிப்பதல்ல, உதாரணமாக வீடு, காரியாலயம், வாகனம் போன்ற இடங்களில் நாம் சுவாசிக்கும் காற்று உட்புற காற்றாக காணப்படுகிறது.
குறிப்பாக வீடுகளில் சமயலறையில் இருந்து வெளியாகும் புகை, குப்பை கூளங்களை எரிப்பதனால் வெளியாகும் புகை, நுளம்புச் சுருள்கள் மூலம் வெளியாகும் புகை, வாசனைக்காக பயன்படுத்தப்படும் சந்தனக்குச்சி, சாம்பிராணியிலிருந்து வெளியாகும் புகை , வாகங்களில் நாம் வாசனைக்காக வைக்கும் வாசனைத் திரவியங்கள், அதிலிருந்து வெளியாகும் வாசனை, அதேபோன்று எமது ஆடைகளுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களை பாவிக்கின்றோம் இவைகள் அனைத்தும் இறுதியில் எமது சுவாசக் குழாயில் தங்கி, அவை புற்றுநோய்களாக உருவாகக் கூடிய ஆபத்துக்கள் காணப்படுவதாக, வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே உட்புற காற்று மாசுபடுதல் தொடர்பில் நாம் அதிக அவதானம் செலுத்த வேண்டும்.
உட்புற காற்று மாசுபடுதலினால் அதிகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிகின்றன.
அவர்களது மரணங்களுக்கு நியூமோனியா, சுவாசக்கோளாறு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்றவை காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகவே இவைகளிலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள, குப்பைகளை எரிப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளுதல், குறிப்பாக பொலிதீன், பிளாஸ்டி போன்றவைகளை எரிப்பதிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்ளுதல், சமையலறையில் புகை வெளிவரும் அடுப்புக்கள் காணப்பட்டால் முடியுமானவரை ஜன்னல், கதவுகளை திறந்து புகை வெளியேறுவதற்கு வழியமைத்தல் போன்ற முன் ஏற்பாடுகளினால் உட்புற காற்று மாசுபடுதலிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.