மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்தில், காணியொன்றில் மேச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை திருடி, கொலை செய்து உரப் பையில் எடுத்துச் சென்றவன் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளான். திருட்டுப்போன 3 ஆடுகளில், இறந்த நிலையில் ஒரு ஆட்டை பொலிசார் மீட்டுள்ளனர்.
நேற்றுக் காலையில் அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர், வழமைபோல வீட்டுக்கு அருகிலுள்ள சுற்று மதில் அடைக்கப்பட்ட காணியில் மேச்சலுக்காக தனது ஆடுகளை கொண்டு சென்று விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
காலை 11 மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு அங்கு சென்ற போது, திருடர் குழுவொன்று ஆடுகளை திருடிக் கொண்டிருந்தது. அவர் சத்தமிட்டதை தொடர்ந்து வேறு சிலரும் சேர்ந்து திருடர்களை விரட்டியபோது, ஒருவரை தாக்கி விட்டு, மற்றவர்கள் மீது கத்தியால் குத்த முற்பட்ட திருடர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
திருடன் ஒருவனை அடையாளம் கண்ட அவர், மீண்டும் திருடனை தொடர்ந்து துரத்திச் சென்ற நிலையில் திருடன் அவனது வீட்டினுள் புகுந்து ஒளிந்து கொண்டான். இதனையடுத்து பொலிஸாரை வரவழைத்து, ஒளிந்திருந்த திருடனை பொலிஸார் கைது செய்ததுடன், 3 ஆடுகள் திருட்டுப் போயுள்ள நிலையில், திருடன் திருடிச் சென்று உரப் பையில் கட்டியவாறு பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட இறந்த நிலையில் ஆடு ஒன்றை மீட்டுள்ளனர்;.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த மூவர் மது அருந்தியுள்ள நிலையில் ஆடுகளைத் திருடுவதற்காகச் சென்றதாகவும், கைது செய்யப்பட்டவன் ஆட்டின் சத்தம் கேட்காதவாறு ஆட்டின் வாயை கயிற்றால் கட்டி கழுத்தை முறித்து கொலை செய்து உரப்பையில் போட்டு எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டு மீண்டும் திருட வந்த நிலையிலேயே, வீட்டுக்காரர்களினால் அடையாளம் காணப்பட்டது பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவன் கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும், இவன் பல்வேறு திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவன். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாத் தெரிவித்தனர்.