வடக்கில் முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் ஆகையால் அங்கிருந்து இராணுவத்தினரை அகற்ற முடியாது என்று மனித உரிமைகள் திறன் விருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அதேவேளை வடக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு போதமானதாக இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவ்வாறெனின் அந்த 12000 முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்து சிறைகளில் அடைப்பதற்கான விருப்பத்தை இப்போதும் சிங்கள அரசுகள் கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் அதேபோன்று, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்துடனேயே இருக்கவேண்டிய ஆபத்தையுமே அமைச்சரின் இந்தச் செய்தி புலப்படுத்தியுள்ளது.
இந்தப் போராளிகளில் பெரும்பாலானவர்கள் வடக்கிலேயே இருப்பதால் வடக்கிலிருந்து இராணுவத்தினரை விலக்க முடியாது என்றும் கூறியிருப்பதன் ஊடாக இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் அளவுக்கு அதிகமாக நிலை கொண்டிருப்பதற்கான காரணத்தையும் சிங்கள அரசு கண்டுபிடித்திருக்கின்றது.
இதன் மறுபக்கமாக, வடக்கில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டிருப்பதையும், தமிழ் மக்களை இயல்பு வாழ்க்கைக்குள் வாழவிடாமல் ஒரு கண்காணிப்பு வலயத்திற்குள்ளே இராணுவத்தினர் வைத்திருக்கின்றனர் என்பதையும் சர்வதேசம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழர்களை சந்தேகக் கண் கொண்டே படையினர் நடத்துகின்ற சூழலில், ஜனாதிபதியாக பதவியேற்று அதிகமான பயணங்களை யாழ்ப்பாணத்திற்கு செய்திருக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால பெருமிதத்தோடு கூறியிருப்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்கிய பின்னணியில், தமிழ் மக்கள் தம்மைத்தாமே ஆளும் அரசியற் சூழலில், நான் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி சென்று வருகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால கூறுவாராக இருந்தால் அதை வரவேற்கலாம்.
தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளையே தமிழ் மக்கள் உணரும் வகையில் முன்னெடுக்காத அரசாங்கம், தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எப்படித் தரப்போகின்றது என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுந்திருக்கின்றது.
மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் வழிவிட்டு நின்றபோதே சில சந்தேகங்கள் எழுந்திருந்தன. அதாவது அரசாங்கம் தமிழ் மக்களை தூண்டி விடுகின்றது.
தமிழ் மக்கள் உணர்ச்சியின் காரணமாக சாதாரண மெழுவர்த்தி ஏற்றுவதையே பெரும் நிகழ்வாக பரப்புரை செய்வதில் ஆர்வமானவர்கள். அவர்களை மாவீரர் நாளை அனுஷடிக்கவிட்டால், அதை உலகலாவிய நிகழ்வாக காட்டிக் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் தம்மை சுதந்திரமாக வாழ விட்டிருப்பதுபோலான சூழலை ஏற்படுத்துவார்கள் என்று எண்ணியது.
இறுதியில் அரசாங்கத்தின் எண்ணமே நிறைவேறியது. தமிழ் மக்கள் ஆங்காங்கே தீபங்களை ஏற்றி மாவீரர்களை நினைவு கொண்டார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு நல்லபெயர் கிடைத்தது.
மறுபக்கத்தில் தற்போதும் யார்? யார்? விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு முயற்சிக்கின்றார்கள் என்பதையும், முன்னாள் போராளிகள் உட்பட அரச புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படுகின்றவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்பதையும், இவ்விடயத்தில் புலம்பெயர்ந்து போயுள்ள விடுதலைப் புலிகளின் தலையீடுகள் அல்லது நிதி உதவிகள் எவ்வாறான வழிகளில் யாருக்கு வந்து சேர்கின்றது என்பதையும் அரசாங்கம் தெரிந்து கொள்வதற்கும் நடந்து முடிந்த மாவீரர் தினம் வசதியாக அமைந்தது.
தமிழ் மக்கள் மாவீரர் மயக்கங்களையும், எழுக தமிழ் போன்ற உணர்ச்சிகளிலும் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக அல்லது சவாலாக காரியங்களை செய்ய வேண்டும் என்ற தேவை, தென் இலங்கை அரசியல் தலைமைகளிடையே மிக அவசியமாகவுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்ச் சக்தியாக இருக்காதுவிட்டால், தென் இலங்கை அரசுகளுக்கு எதிராக தென் இலங்கை சிங்கள மக்கள், பாருளாதாரப் பிரச்சினைகளுக்கு எதிராகவும், அரசியல் பிரச்சினைகளுக்கு எதிராகவும் வீதியில் இறங்கிவிடுவார்கள் என்பதும், தமிழ் மக்களிடையே இருக்கின்ற சிங்கள எதிர்ப்பு உணர்வைப் போலவே சிங்கள மக்களிடையேயும் இருக்கின்ற தமிழ் எதிர்ப்பானது அணையாத தீபமாக இருப்பதை தென் இலங்கை அரசியல் தலைமைகள் பாதுகாப்பதற்கே விரும்புகின்றன.
சில தேரர்கள் இன்று தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வீதியில் இறங்கி இனவாதம் பேசவும், வன்முறைகளை புரியவும் முடியுமாக இருக்கின்றது என்றால் அதுவும் தற்செயலாக நடைபெறும் காரியங்களல்ல. அதுவும் அதிகாரத்திலிருப்பவர்களின் அல்லது மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிப்பவர்களின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைதான் என்பதையும் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் இன முரண்பாட்டை ஏற்படுத்தும்விதமான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக மட்டக்களப்புக்கு நுழைய முயன்ற கலகொட அத்தே ஞானசேர தேரோவை மட்டக்களப்புக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் விதித்திருந்த தடையை வீதியில் வைத்து பகிரங்கமாக கிழித்து எறிந்தும், மட்டக்களப்பு நகருக்கு தனது சகாக்களுடன் அத்துமீறி நுழையவும் முற்பட்ட கலகொட தேரர் அடுத்தடுத்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அருகில் சந்திப்பொன்றில் இருக்க முடிந்திருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களை மாவீரர் தினத்தை அனுஷ;டிக்கவும், எழுக தமிழை நடத்தவும் அனுமதித்து அரசாங்கம் வழிவிட்டுவிட்டால் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
தமிழ் மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி ஆயிரக்கணக்கான உயிர்களையும், உடமைகளையும் இழந்தது இதற்காகத்தானா? – தமிழ் மக்களின் பிரச்சினைகள் இவ்வளவுதானா? என்று சிங்கள மக்களை சிந்திக்கச் செய்யும் தந்திரோபாயங்களுக்கள் தமிழ் மக்கள் சிக்கிவிடக்கூடாது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன? என்பதையும், அதற்கு எவ்வாறான தீர்வு தேவை என்பதையும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டியது இன்றை சூழலில் முக்கியமான கடமையாகும்.