சையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்குப் பின் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘புரூஸ்லீ’. அறிமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பொங்கல் ரிலீசாக இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழு நேற்று அறிவித்திருக்கிறது. இதுதவிர அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குற்றம் 23’, கிருஷ்ணாவின் ‘யாக்கை’, கலையரசனின் ‘அதே கண்கள்’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் மேலும் 5 படங்கள் வெளியாவது சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
எனினும் டிக்கெட் முன்பதிவு மற்றும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் விஜய்யின் ‘பைரவா’வுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதால் இந்த போட்டியிலிருந்து ஒருசில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.