போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புஷ்பராஜ் கபில் (21), இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத் (32) ஆகிய இருவருக்குமே சிறைத்தண்டனை விதித்துள்ளது.
புஷ்பராஜ் கபிலுக்கு ஏப்ரல் 28ஆம் திகதியும், இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத்துக்கு ஜூன் 4ஆம் திகதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்திருந்ததற்காக கபில் தண்டிக்கப்பட்டார். போலி ஆவணங்களைப் பெற கபிலுக்கு உதவிய பிரஷாத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி இருவரும் சிங்கப்பூரில் நுழைய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர்.
கனடாவுக்குள் அகதியாக நுழைய விரும்பிய கபில், சேம் என்பவரின் உதவியை நாடியுள்ளார். கனடா செல்வதற்கான ஆவணங்களைத் தயாரித்து கொடுத்தால் 9,000 சிங்கப்பூர் டொலர் தருவதாக சேமிடம் கபில் உறுதி கூறினார்.
உடனே சேம், பிரஷாத் என்பவருடன் தொடர்புகொண்டு கபிலின் பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள மலேசியரான முகமட் என்பவரிடமிருந்து பிரஷாத் போலி ஆவணங்களைப் பெற்றார்.
பின்னர் பிப்ரவரி 28ஆம் திகதி கபிலும், பிரஷாத்தும் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டனர்.
அப்போது போலி ஆவணங்கள் உள்ள பையை கபிலிடம் பிரஷாத் ஒப்படைத்தார்.
மறுநாள் நாள் காலை 6.30 மணியளவில் இருவரும் துவாஸ் சோதனைச் சாவடியை வந்தடைந்தனர்.
குடிநுழைவுத்துறை அதிகாரியிடம் கபில் தனது இலங்கை கடவுச்சீட்டை காட்டினார். ஆனால் அவரது நடத்தையில் அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் கபிலையும் அவருடன் வந்த பிரஷாத்தையும் மேலதிகாரியிடம் அனுப்பி வைத்தார்.
சோதனையில் அவர்களிடம் போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
பொதுவாக இப்படியான செயலை செய்வதை தவிர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.