அமெரிக்காவின் வேலை இல்லா திண்டாட்டம் உழைக்கக் கூடிய மொத்த மக்கள் எண்ணிக்கையில் 25 சதவிகித மக்களுக்கு வேலை பறி போய்விட்டதாக சி என் என் பிசினஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 42.6 மில்லியன் (4.26 கோடி) எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் கொரோனாவுக்கு முன்பே 45 % மக்கள் வேலை இல்லா திண்டாட்டத்தில் இருந்ததாக சி என் என் தகவல் வெளியிட்டிருக்கிறது.
அதே போன்று, கெண்டக்கி மாகாணத்தில் சுமார் 40 %-க்கு மேற்பட்ட உழைக்கும் மக்களுக்கு வேலை இல்லாமல் இருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன. வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த அமெரிக்கர்களுக்கு மேலும் அடி கொடுப்பது போல கொரோனாவின் தாக்கம் அமைந்திருக்கிறது.
இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவில், ஒருவர் வேலையை இழந்தால், அவருக்கு அரசாங்கம் சில பண உதவிகளைச் வழங்குவது வழமையாகும். எனினம் இப்போது அமெரிக்காவில் அந்த உதவித் திட்டமும், சரியாக செயல்பட முடியாமல், சிக்கலில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
வேலை இழந்த அமெரிக்கர்கள் கடந்த மூன்று மாதங்களில் 214 பில்லியன் டாலர் பணத்தை Unemployment Benefit-ஆக பெற்று இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்க கருவூலம் 146 பில்லியன் டொலர் பணத்தை தான் கொடுத்து இருக்கிறார்கள். மீதமுள்ள 68 பில்லியன் டாலர் பணம் இன்னும் முறையாக வேலை இல்லாமல் தவிக்கும் மக்களுக்குச் சென்று சேரவில்லை என கணக்கு சொல்கிறது ப்ளூம்பெர்க்.
இது தொடர்பில் ப்ளும்பெர்க் கணக்கின் படி, வேலை இழந்தவர்களில் 31 சதவிகித மக்களுக்கு, இன்னும் அரசிடம் இருந்து Unemployment Benefit சென்று சேரவில்லை என்கின்றன தகவல்கள். மறுபக்கம் பக்கம் வேலை இழப்புகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வார இறுதிக்குள் குறைந்தபட்சம் 18 லட்சம் பேர் வேலை இழப்புக்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்தே, வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் கூட பழைய கொடுப்பனவுகள் எவையும் கொடுக்கப்படவில்லை என்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் 26 லட்சம் பேர், மார்ச் 2020 முதல் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதில் 6.5 லட்சம் பேருக்கு, கடந்த 3 மாத காலமாக க்ளெய்ம் கொடுக்கவில்லை என்கிறது பிசினஸ் இன்சைடர் பத்திரிகை.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிலேயே மக்கள், தங்களுக்கான Unemployment Benefit-களுக்கு விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மறு பக்கம் புதிதாக Unemployment Benefit கேட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில், அதிபர் தேர்தல் வேறு நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் வேலை இல்லா திண்டாட்டப் பிரச்சினை, அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியிருக்கிறது.