பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் மார்கோஸ்ஸை, நேற்று (வெள்ளிக் கிழமை) ஆர்ஜன்ரீன மத்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெருவை பிறப்பிடமாகக் கொண்ட ‘மார்கோஸ்’ எனப்படும் Marco Antonio Estrada Gonzalez, ஆர்ஜன்ரீன தலைநகர் புவனஸ் அயர்ஸின் பறநகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் மீது முக்கியமான மூன்று போதைப் பொருள் சார் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 350 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள் மற்றும் 12 இற்கும் மேற்பட்ட ஆயுதங்கள் என்பவற்றோடு, 31,500 அமெரிக்க டொலர் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மார்கோஸ் ஆர்ஜன்ரீன போதைப் பொருள் கடத்தல் வரலாற்றில் முக்கிய புள்ளியாகக் கருதப்படுகின்றார். முன்னர் இவர் மீது போதைப் பொருள் கடத்தல் சார் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆயினும் அந்தக் காலப்பகுதியினும் அவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரிவித்த ஆர்ஜன்ரீன பாதுகாப்பு அமைச்சர் பட்ரீசியா, “எங்கள் நாட்டின் குற்றவியல் வரலாற்றின் முக்கிய புள்ளி தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நபர்கள் தொடர்பாக தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவர் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதோடு, பிரபல போதைப் பொருள் கடத்தல் குழுவிற்கும் தலைமை தாங்கினார்” எனக் குறிப்பிட்டார்.