ஸ்ரீகாளஹஸ்தி அருகே கூகதிவாரிபள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 36), தொழிலாளி. இவருக்கு லோகேஸ்வரி (32), சுஜாதா (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இதில் லோகேஸ்வரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும், சுஜாதாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பீதண்ணகாரிபள்ளியை சேர்ந்த சீனிவாசலு என்பவருக்கும் லோகேஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதேபோல் கெங்கிவாரிபள்ளியை சேர்ந்த அரிசங்கர் என்பவருக்கும், சுஜாதாவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது.
தனது 2 மனைவிகளுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த லட்சுமி நாராயணா தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து 2 மனைவிகளையும் அடித்து, துன்புறுத்தி வந்தார்.
இதனால் லோகேஸ்வரியும், சுஜாதாவும் தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் லட்சுமி நாராயணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
சம்பவத்தன்று சுஜாதா பீலேர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து தனது கணவர் லட்சுமிநாராயணாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வர பஸ் கிடைக்கவில்லை. எனவே, மோட்டார் சைக்கிளை எடுத்து வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவர் மோட்டார் சைக்கிளில் பீலேர் வந்து சுஜாதாவை வீட்டுக்கு அழைத்து சென்றார்.
கார்கேய ஆறு அருகே சென்று கொண்டிருக்கும் போது சுஜாதா மோட்டார் சைக்கிளை நிறுத்த கூறினார். லட்சுமி நாராயணா மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது, அங்கு லோகேஸ்வரி, சீனிவாசலு, அரிசங்கர் மற்றும் நாகராஜ், சுப்பிரமணியம், லட்சுமய்யா, எல்லம்பள்ளியை சேர்ந்த மகேஷ் ஆகியோர் நின்றிருந்தனர்.
சுஜாதா, லோகேஸ்வரி உள்பட 8 பேரும் சேர்ந்து லட்சுமி நாராயணாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் கும்மணகுண்டபள்ளியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணத்தை போட்டு விட்டு அனைவரும் சென்று விட்டனர்.
கதிரி ரெயில்வே போலீசார் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக, அடையாளம் தெரியாத ஆண் பிணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமி நாராயணாவின் தாய் நாகுலம்மா சதும் போலீஸ் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என்று புகார் செய்தார்.
இதையடுத்து அடையாளம் தெரியாத பிணம் குறித்து கதிரி ரெயில்வே போலீசார் சதும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நாகுலம்மா தனது மகன் தான் என்று அடையாளம் காட்டினார்.
இதுகுறித்து சதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லட்சுமி நாராயணாவை அவரது மனைவிகள் லோகேஸ்வரி, சுஜாதா உள்பட 8 பேர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து லோகேஸ்வரி, சுஜாதா, சீனிவாசலு, அரிசங்கர், நாகராஜ், சுப்பிரமணியம், லட்சுமய்யா, மகேஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பீலேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 8 பேரையும் சிறையில் அடைத்தனர்.