காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும்.
30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஓட்ஸ் ராகி கஞ்சி முளை கட்டிய பச்சைப் பயறு சுண்டல் இட்லி தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது. மந்தமான உணர்வை ஏற்படுத்தும். காலையிலேயே அஜீரணத்தை ஏற்படுத்தி உங்களின் சுறுசுறுப்பான நாளை வீணாக்கிவிடும். பத்து மணிக்கு மேல் ஒரு கப் தயிரில் பழங்களை வெட்டிப்போட்டு ஐஸ்க்ரீம் போல சாப்பிடலாம் அல்லது ஒரு மில்க்ஷேக் அருந்தலாம்.
தயிரில் கால்சியமும் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் உணவு செரிமானத்தை மேம்படுத்தும்.
மதியம் இரண்டு மணிக்குள் சமச்சீரான உணவுகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதத்துக்கு இணையாக காய்கறி கூட்டு பொரியல் அவியல் எடுத்துக்கொள்வது அவசியம்.
அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அவித்த சிக்கன் அல்லது மட்டன் கறி இரு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.
மாலை நான்கு மணி அளவில் பாப்கார்ன் பொரி அவித்த சுண்டல் ஸ்வீட்கார்ன் சூப் பழச்சாறு போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம்.
காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அருந்தக் கூடாது. இரவில் எளிமையான உணவுகளான கோதுமை தோசை அடை அவியல் இட்லி பணியாரம் சப்பாத்தி ஆகியவற்றை உண்ணலாம்.
இரவில் பொரித்த உணவுகளான புரோட்டா சிக்கன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இயற்கையான பழச்சாறுகளை மட்டுமே அருந்தவேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் துரித உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது. நேரம் தவறி சாப்பிடக் கூடாது.
சுருக்கமாக சொன்னால் முறையான உணவும் போதுமான தூக்கமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் இருந்தால் எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய நாளாக மாறிவிடும். அன்றாடம் தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்…