பிரித்தானியாவில் கருப்பின ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டுவந்த மக்கள் தற்போது அடிமை வர்த்தகர்கள் மற்றும் காலனித்துவவாதிகளின் நினைவுச்சின்னங்களை அகற்றும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்காவில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் பிளாக் லைவ்ஸ் மேட்டர் என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரித்தானியாவில் தற்போது இந்தப் போராட்டம் வேறு வடிவத்தில் வலுப்பெற்று வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அடிமை வர்த்தகர்கள் மற்றும் காலனித்துவவாதிகளின் நினைவுச்சின்னங்களை அகற்றுவதற்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
18 ஆம் நூற்றாண்டில் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்ட ராபர்ட் மில்லிகனின் சிலை லண்டன் அருங்காட்சியகத்திற்கு வெளியே நிறுவப்பட்டிருந்தது.
கடந்த செவ்வாயன்று அதன் பீடத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிலை கிரேன் மூலம் கீழிறக்கப்பட்டபோது அங்கு குவிந்திருந்த பார்வையாளர்கள் பலத்த ஆரவாரம் செய்தனர்.
சிலை அகற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த டவர் ஹேம்லெட்ஸ் பகுதி மேயர் John Biggs,
மில்லிகனை துறைமுகங்களை உருவாக்கும் தொழிலதிபர் என்று மக்கள் எண்ணியதாகவும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவர் ஒரு அடிமை வர்த்தகர் என்பது தெரியவரும் என்றும் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரிஸ்டல் நகரில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் அங்குள்ள அடிமை வர்த்தகர் எட்வர்ட் கால்ஸ்டனின் சிலையை அதன் பீடத்திலிருந்து பெயர்த்து எடுத்தனர்.
பின்னர் எட்வர்டின் சிலையை தூக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் அங்குள்ள ஆற்றில் வீசி எறிந்தனர்.
கால்ஸ்டனின் சிலையை அகற்றுவது ஒரு குற்றச் செயல் என்று பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எச்சரிக்கை விடுத்தபோதும், அதனை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் தாங்கள் நினைத்ததை செய்து முடித்தனர்.
இதேபோல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் குவிந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள Cecil Rhodes சிலையை அகற்றுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே லண்டன் மாநகர மேயரான சாதிக் கான், தங்கள் நகரம் மற்றும் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி அடிமை வர்த்தகத்திலிருந்து பெறப்பட்டது என்பது ஒரு வருத்தமான உண்மை என்றாலும்,
இதனை பொது இடங்களில் கொண்டாட வேண்டியதில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் லண்டனில் உள்ள சிலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மறு ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ? என்று அச்சமூட்டிய வகையில் நடைபெற்ற போராட்டம்,
பிரித்தானியாவில் இன்னும் எத்தனை சிலைகள் உருளப்போகிறதோ என கூறும் அளவிற்கு தீவிரமடைந்து வருகிறது.