தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நேற்று ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறையினர் படப்பிடிப்பு குழுவினரிடம் சென்று இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான அரசு வழங்கிய அனுமதியை கேட்டனர்.
ஆனால் படப்பிடிப்பு குழுவினர் அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடத்துமாறு அறநிலையத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த குழுவினர் ஆயத்தமாகி இருந்தனர். வனத்துறையினரும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறினர்.
இதனால் படப்பிடிப்புக்கு தயாராகி வந்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா மற்றும் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.