கல்லூரி மாணவி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலை சேர்ந்த நாகேஷ்வரன் சாவித்ரி (19). இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி, விலங்கியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், தோப்புக்கொல்லையை சேர்ந்த பெயிண்டராக பணிபுரியும் விவேக் (20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சாவித்ரி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் சாவித்ரிக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இது குறித்து, அவர் காதலன் விவேக்கிடம் தகவல் தெரிவித்தார். இருவரும் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொள்வதற்காக காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு சோதனைச்சாவடியில் காரை போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது 2 பேரும் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக செல்வதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதில் விவேக்கிற்கு 21 வயது நிரம்ப இன்னும் 4 மாதங்கள் இருந்ததால், சாவித்ரியை அவரது பெற்றோருடன் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நள்ளிரவு வீட்டில் சாவித்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் உடனடியாக எரிக்கப்பட்டு விட்டதாகவும் விவேக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து விவேக் மற்றும் மாதர் சங்கத்தினர், சி.ஐ.டி.யூ.வினர், இந்திய மாணவர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமாரை நேற்று முன்தினம் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில், சாவித்ரி தற்கொலை செய்திருக்க மாட்டார் எனவும், அவர் கவுரவக்கொலை செய்யப்பட்டிருப்பார் எனவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற அவர் ஆலங்குடி போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாவித்ரி தரப்பினர், அவர் தற்கொலை செய்ததாகவும், உடனடியாக உடல் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல் எரிக்கப்பட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.