மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரஸ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இந்த வலிமிகுந்த சிகிச்சையில் 18 நாட்கள் தாக்குப்பிடித்து, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளது.
இந்த நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது, மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்படும் என்பதனால் வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.
மிகவும் வலிமிகுந்த இந்த சிகிச்சையானது உடல்நிலையைப் பொருத்து, ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்கள் வரை தேவைப்படும்.
அவசியம் ஏற்பட்டால் அதைவிட கூடுதல் நாட்களும் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும்.
இந்த நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது 4 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்றியது.
இதனையடுத்து அந்தக் குழந்தை கடந்த மாதம் 25ம் தேதி விசாகப்பட்டினம் விஐஎம்எஸ் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் 18 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த குழந்தைக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், தொற்று இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து நேற்று மாலை குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.