இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக இன்று (14.06.2020) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் மூண்டது.
இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சின்மயா மிஷன் ஆன்மீக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர், பிரதம குருக்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கும், ஆலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலேயே குறித்த சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் செயற்படும் பல இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
மலையக மக்களுக்கு ஆன்மீக சேவையாற்றும் நோக்கிலேயே இறம்பொடை, ஆஞ்சநேயர் கோவிலில், இலங்கை சின்மயா மிஷனின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது என்றும், ஆரம்பத்தில் குறித்த அமைப்பு சிறப்பாக செயற்பட்டதாகவும்,
இதனால் பலனடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டும் மக்கள், தற்போது சின்மயா மிஷன் வியாபார நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்று நடைபெற்ற சந்திப்பின் போதும் இது குறித்து சில இந்து குருமார்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல நிர்வாகத்தில் இடம்பெறும் மோசடிகளையும் பட்டியலிட்டுக்காட்டியதுடன், ஆன்மீக நிறுவனம் எவ்வாறு, வியாபார ஸ்தாபனமாக இயங்குகின்றது என்பதையும் விபரித்தனர்.
அதேபோல் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிர்வாகம் தற்போது அம்மக்களை ஓரங்கட்டும் வகையிலும் நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட சேவைகளை வழங்க மறுப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.
புனித பூமியாக கருதப்படவேண்டிய ஆலய வளாகத்துக்குள் அரங்கேறும் சில முறையற்ற செயற்பாடுகள் பற்றியும், இதனால் நிர்வாகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள களங்கள் சம்பந்தமாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக்கணைகளுக்கு சின்மயா மிஷனின் இலங்கைக் கிளை அதிகாரிகளால் உரிய பதில்களை வழங்கமுடியாமல் போனது. கூட்டத்தையும் இடைநடுவிலேயே முறித்துக்கொண்டனர்.
இந்தியாவில் உள்ள தலைமை அலுவலகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒரு மாதத்துக்குள் தீர்வொன்றை வழங்குவதாக மட்டுமே உறுதியளிக்கப்பட்டது.
சின்மயா மிஷன் என்பது சிறப்பாக ஆன்மீக சேவையாற்றும் நிறுவனமாகும். இலங்கையிலும் அதன் பணிகள் இடம்பெறுகின்றன.
ஆனால், இடைத்தரகர்களாக செயற்படும் சிலராலேயே ஆன்மீகம் கூட வியாபாரம் ஆகிவிட்டது. அத்தகையவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆன்மீக வாதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.