பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவரின் குற்றச்சாட்டு, இப்போது அங்கிருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களை அலற வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானில் 139,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,632 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் போராடி வருகிறார்.
இந்நிலையில், அங்கு கொரோனா வைரஸிற்கு இணையாக பாலியல் சர்ச்சை ஒன்று புயலாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவை சேர்ந்த சிந்தியா ரிச்சி என்ற பெண் தான், கடந்த 2010 முதல் பாகிஸ்தானில் வசித்து வரும் இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி) சமூக ஊடகப்பிரிவில் பணியாற்றியதாகச் சொல்லப்படுகிறது.
இவர், தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகிறார்.
1967-ல் ஆரம்பிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தானில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒரு கட்சிகளுள் ஒன்று. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.
பெனசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி தற்போது இதன் தலைவராக இருக்கிறார். இவர்மீதுதான் அமெரிக்க பெண்மணியான சிந்தியா ரிச்சி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆசிப் அலி சர்தாரியால் (பெனசீர் பூட்டோவின் கணவர்) பாலியல் உறவுகொள்ளப்பட்ட பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பெனசீர் பூட்டோ உத்தரவிடுவார் என்று குறிப்பிட்டிருந்தது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க காரணமானது. ப
இதுபோன்ற சிந்தியா ரிச்சி வெளியிடும் தகவல்கள் பாகிஸ்தான் அரசியல் களத்தில் அணுகுண்டுகளாக வெடித்துக்கொண்டிருக்கின்றன.
முதலில் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தாம் சென்றதாகவும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானியும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ரஹ்மான் மாலிக்கும் பாகிஸ்தானின் மதிப்பை உயர்த்துவதற்கு உதவுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், அதைத் தொடர்ந்து, பி.பி.பி-யின் தகவல்தொடர்பு ஆலோசகராக தாம் இருந்ததாகவும், 2010-ம் ஆண்டு பாகிஸ்தானில் குடியேறியதாகவும், தற்போது இஸ்லாமபாத்தில் வசித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பி.பி.பி கட்சியுடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டு வந்த சிந்தியா ரிச்சி, திடீரென தற்போது அந்தக் கட்சியின் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார்.
ரஹ்மான் மாலிக் 2011-ஆம் ஆண்டு தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறும் அவர், முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கீலானியும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மக்தூம் சஹாபுதீனும் ஜனாதிபதி இல்லத்துக்குள் வைத்து தம்மை துன்புறுத்தினார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறுகிறார்.
2018 நாடாளுமன்றத் தேர்தலில் பி.பி.பி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், தற்போது சிந்து மாகாணத்தில் ஆளும் கட்சியாக அது இருக்கிறது.
சிந்தியா ரிச்சி கூறிவரும் அதிரடியான குற்றச்சாட்டுகளால் அதிர்ந்து போயுள்ள அந்தக் கட்சியின் தலைவர்கள், இந்த விவகாரம் குறித்து பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபையில் உறுப்பினராக இருக்கும் பி.பி.பி கட்சியின் பிரதிநிதியான ஷெர்ரி ரஹ்மான், இந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுத்துள்ளார். சிந்தியா ரிச்சி அவதூறுகளை அள்ளிவீசுவதாக ஜூன் 1-ஆம் திகதி இஸ்லாமபாத் பொலிசாரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது.