ஸ்ரீலங்காவின் கடந்த அரசாங்கம் தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அறிவிப்பால் பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் தகவல்களை வெளியிட்ட போதிலும் அது குறித்து அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் இன்றைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கவனம் செலுத்தியிருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கோட்டாபய நாட்டின் ஜனாதிபதி என்பதால், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடக்குவதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்ப முடியும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.