நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்று எவரும் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டாமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களிடம் அதன் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் நேற்று நடத்திய விசேட சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இலக்காகக் கொண்டுதான் தேர்தல் பரப்புரைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மூவின மக்களையும் ஒன்றிணைத்து இந்தப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் ஊடகவியலாளர்கள் சந்திப்புகளில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இப்படியான கருத்துக்களை நாம் தவிர்க்க வேண்டும்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை வேண்டுமெனில் மூவின மக்களின் ஆதரவும் எமக்கு நிச்சயம் வேண்டும். எனவே மூவின மக்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டுதான் தேர்தல் பரப்புரைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காகப் பொதுத்தேர்தலில் அவர்களைப் புறக்கணித்துவிட்டுப் பரப்புரைகளை நாம் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.