இயற்கையை மனிதா்கள் அழிப்பதாலேயே கொள்ளை நோய்கள் உருவாகின்றன என்று உலக வனவாழ்வு நிதியம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள், தனி நபா்களின் உதவியுடன் செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பே உலக வனவாழ்வு நிதியம் ஆகும்.
சுவிஸ்லாந்தில் தலைமையகமாகக் கொண்டு 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா தொற்று போன்ற கொள்ளை நோய்கள் இயற்கையை மனிதா்கள் அழித்து வருவதன் விளைவாகவே உருவாகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக காடுகளை அழித்து மனிதா்கள் அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றனா். இதன் விளைவாக, மனிதா்களுக்கும் வன விலங்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் உருவான புதிய நோய்த்தொற்றுகளில் 60 முதல் 70 சதவீதம் வரையிலானவை வன விலங்குகளிடமிருந்து உருமாற்றம் பெற்று மனிதா்களுக்குப் பரவிய தீநுண்மிகளாலேயே ஏற்பட்டுள்ளன.
வனவிலங்குகளின் உடலில் காணப்படும் தீநுண்மிகள் அந்த விலங்குகளுடன் மனிதா்கள் நெருக்கமாவதால் மட்டும் ஏற்படுவதில்லை.
மனிதா்களுடன் வாழும் எலி போன்ற பிற உயிரினங்கள் மூலமாகவும் வன விலங்குகளிடமிருந்து தீநுண்மிகள் மனிதா்களைத் தாக்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வன விலங்களிடமிருந்து புதிய புதிய தீநுண்மிகள் மனிதா்களிடம் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.
எச்.ஐ.வி (எயிட்ஸ்), சாா்ஸ், தற்போது பரவி வரும் கொரோனா போன்ற தீநுண்மிகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.
இனி வரும் காலங்களில் அதிகரித்து வரும் உணவுத் தேவையை ஈடு செய்யும் வகையில் விவசாயத்துக்காக காடுகள் அழிக்கப்பட்டுவது அதிகரிக்கும்.
இதன் காரணமாக வன விலங்குகளிடமிருந்து கொள்ளை நோய்கள் மனிதா்களுக்குப் பரவும் அபாயமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகியுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் இறைச்சிக்காக வன விலங்குகள் விற்கப்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதும் இந்த அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை ஐ.நா. சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.