கணவர் இறந்த அதிர்ச்சியில், அவரது மனைவியும் மயங்கி விழுந்து இறந்துள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே, மிட்டா மண்டகப்பட்டு காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 70; சவுக்கு வியாபாரி. மனைவி ராமேஸ்வரி, 65. இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். குடிப் பழக்கம் உடைய கிருஷ்ணனுக்கு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்து வந்துள்ளது.
10 நாட்களுக்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மதியம், 1:45 மணியளவில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல், நேற்று முன்தினம் முதல், அழுதபடியே இருந்த ராமேஸ்வரி, நேற்று மதியம், 1:45 மணியளவில் மயங்கி விழுந்து, இறந்துள்ளார்.
இருவரது உடல்களும், நேற்று மாலை, 5:30 மணிக்கு, மிட்டா மண்டகப்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டன.