லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப்பகுதியில் நடந்த மோதலின்போது சீன வீரர்கள், ஆணியடிக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் இந்திய வீரர்களைத் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியா பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு சீனா தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள தௌலத் பெக் ஓல்டி விமானப்படைத் (Daulat Beg Oldie airfield) தளத்துக்கான சாலைப் பணிகளை இந்தியா கடந்த அக்டோபரில் முடித்தது.
அதேபோல், எல்லையை ஒட்டிய பகுதிகளில் வரும் 2022ம் ஆண்டுக்குள் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 66 கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சீனா தொடர்ச்சியாக எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறது.
கடந்த சில வாரங்களாக இருநாட்டு எல்லையில் வீரர்கள் இடையே மோதல் நடைபெற்றதாக வெளியான தகவல் பதற்றத்தை அதிகரித்து வந்தது. இதையடுத்து, இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், படைகளை பின்வாங்கிக் கொள்வது எனவும் அந்தப் பகுதியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுப்பது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்தநிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாட்ரோல் பாயின்ட் 14 என்ற இடத்தில் ஒப்பந்தத்தை மீறி சீனா டென்ட் அமைத்ததாகத் தெரிகிறது. இந்த டென்டை அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய ராணுவ வீரர்கள் அகற்ற முடிவு செய்து கடந்த 15ம் தேதி அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, கர்னல் சந்தோஷ் பாபுவைக் குறிவைத்து சீன வீரர்கள் கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு இந்தியா தரப்பில்தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கிகள் இல்லாமல் கற்கள், கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் நடந்த மோதலில் வீரர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில், இந்தியா தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 பேர் வீரமரணமடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பலமணி நேரம் நீடித்த இந்த மோதல் நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது. சீனா தரப்பில் அதிகாரபூர்வமாக காயமடைந்தவர்கள் பற்றியோ இறந்தவர்கள் பற்றியோ தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், சீன ராணுவ வீரர்கள் 35 பேர் வரை காயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தநிலையில், சீன ராணுவ வீரர்கள் ஆணியடிக்கப்பட்ட கம்பிகள் உள்ளிட்ட கொடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை குறித்த புகைப்படங்கள் பிபிசி-க்கு இந்திய ராணுவ உயரதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக அதன் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும், பாதுகாப்புத்துறை வல்லுநரான அஜய் சுக்லாவும் ட்விட்டரில் பகிர்ந்து, சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனம் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அவர் புகைப்படத்தோடு பதிவிட்டிருந்தார்.
சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான வீரர்களை சீன ராணுவம் குவித்ததாகவும், கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்களைக் கொண்டு இந்திய வீரர்களை அவர்கள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம், ஆணியடிக்கப்பட்ட கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டது தொடர்பாக இந்திய ராணுவம் இதுவரை அதிகாரபூர்வமாக விளக்கமளிக்கவில்லை.