விக்கிரவாண்டி அருகே ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி காரணமாக டிரைவர் பரிதாபமாக இறந்தார். டிரைவரின் சாதுர்யத்தால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி தனியார் பேருந்து சென்றது. திருச்சி அருகே திருவளத்திபட்டியை சேர்ந்த பாலக்கிருஷ்ணன் (48), பேருந்தை ஓட்டி வந்தார்.
60 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அருகே வந்தபோது பாலக்கிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்திய அவர் இருக்கையிலேயே மயங்கி சரிந்தார். ஆனால் சாதாரண மயக்கம் என கருதிய பயணிகள் பின்னால் வந்த இதே நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தில் ஏறி திருச்சி சென்றனர். கிளீனர் மட்டும் பேருந்தில் இருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் சாதுர்யமாக பேருந்தை ஓரம் கட்டி நிறுத்தியதால் 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.