ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களை விடுவிக்கும் நடவடிக்கை கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போது ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு கடற்படைத் தளபதி முகம் கொடுத்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் அரசாங்கத்துக்கும் கடற்படைத் தளபதிக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து வைத்திருந்தனர்.
நான்கு நாட்களாக இந்தக் கப்பல்களை அவர்கள் விடுவிக்க மறுத்த நிலையில் எஸ்.பி.எஸ். எனப்படும் கடற்படையின் விசேட கொமாண்டோ அணியைக் களம் இறக்கி அந்தக் கப்பல்களை விடுவித்திருந்தார் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன.
அவரே இந்த நடவடிக்கையை நேரடியாக வழி நடத்தினார். கடற்படை படகு ஒன்றில் அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சென்று இறங்கிய போது அங்கு படம் எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரை கண்டபடி திட்டியவாறு ஆவேசமாகப் பிடித்துத் தள்ளினார்.
ஊடகவியலாளர் தம்மை அடையாளம் காட்டிய போதும் கடற்படைத் தளபதி விடவில்லை. அந்தத் தருணத்தில் அவர் ஆவேசமானவராக நடந்து கொண்டார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அங்கு எடுக்கப்பட்ட விடியோக்களால் அதனை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர் முப்படைகளின் தளபதி ஒருவரால் பகிரங்கமாகத் தாக்கப்பட்ட அல்லது அச்சுறுத்தப்பட்ட முதல் சம்பவமாக இது கருதப்படுகின்றது.
இந்தச் சம்பவத்திற்கு ஊடக மற்றும் பொது அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. குறித்த தளபதி மிலேச்சத்தனமாக நடந்து கொண்டு இருப்பதாக கூட்டு எதிரணியும் கூறியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் படங்களுடன் வெளியான நிலையில் அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
கடற்படைத் தளபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற குரல்களை அடக்குவதற்காக அவர் மீது பாதுகாப்பு அமைச்சின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் அத்தகையதொரு விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை மாறாக ஹம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பாக ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடற்படையிடம் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி கோரியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு அமைய புதன்கிழமை கடற்படை அறிக்கையொன்றைக் கையளித்தது. அந்த அறிக்கையைப் படித்து முடித்த பின்னர்தான் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்புச் செயலர் தெரிவித்திருந்தார்.
மறு நாள் வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இந்த அறிக்கையைக் கையளித்தார் கடற்படைத் தளபதி.
ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தும் நடவடிக்கை கடற்படைத் தளபதிக்கு எதிராக அரசாங்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இதனால் அவரது பதவி பறிக்கப்படும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக முகாம்களில் உள் நுழைய தடை விதிக்கும் முடிவை எடுப்பதில் குறித்த தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன முக்கிய பங்கு வகித்திருந்தார்.
அந்த முடிவுக்கு உடந்தையாகச் செயற்பட்ட அப்போதைய விமானப் படைத் தளபதி ஏயர் சீவ் மார்ஷல் ககன் புளத்சிங்கவுக்கு சேவை நீடிப்பு வழங்காமல் வீட்டிற்கு அனுப்பியது.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு சேவை நீடிப்பு வழங்கினாலும் விமானப் படைத் தளபதியாக இருந்த ககன் புளத்சிங்கவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதே போன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவை அரசாங்கம் வீட்டிற்கு அனுப்பக் கூடும் என்ற கருத்து பலரிடமும் காணப்படுகின்றது.
ஆனால் கடற்படைத் தளபதி விடயத்தில் அரசாங்கம் மென்போக்கு ஒன்றைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. ஆரம்பத்தில் இருந்து அவரைக் காப்பாற்றுகின்ற வகையில் அரச இயந்திரம் செயற்படுகின்றது.
ஒரு சில அமைச்சர்கள் ஊடகவியலாளரைத் தாக்கிய கடற்படைத் தளபதியின் செயலை கடுமையாக விமர்சித்துள்ள போதிலும் பெரும்பாலானவர்கள் அவரது செயலுடன் ஒத்துப் போவதையும் காண முடிகின்றது.
கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்குக் கடற்படைத் தளபதியை அழைத்துப் பேசிய பிரதமர் ரணில்விக்ரமசிங்க துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய மற்றும் சிங்கப்பூர் கப்பல்களை விடுவிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
கடற்படைத் தளபதியை அழைத்து குட்டு வைக்கப் போகின்றார் என எதிர்பார்த்த பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெளிநாட்டுக் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சர்வதேச கப்பல் நிறுவனங்களிடம் இருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து தாமும் ஜனாதிபதியும் பேசி பாதுகாப்புச் செயலர் மூலமாகவே கடற்படையை நடவடிக்கையில் இறங்குமாறு உத்தரவிட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இதன் மூலம் கடற்படையை அங்கு களம் இறக்கியதன் பின்னணியில் அரசாங்கமே இருந்தது என்பது உறுதியாகி இருக்கிறது. அரசாங்கத்தின் உத்தரவைத் திறமையாகச் செயற்படுத்தியதால்தான் கடற் படைத் தளபதிக்கு அந்தப் பாராட்டு கிடைத்தது.
அது மாத்திரமன்றி சர்வதேச போக்குவரத்து நிறுவனமும் கடற்படைத் தளபதியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறது. காரணம் தடுத்து வைத்திருந்த கப்பல்களை அவர் விடுவித்திருந்தமைதான்.
எனினும் ஊடகவியலாளரை ஏன் கடற்படைத் தளபதி அச்சுறுத்தியும் ஆவேசமாக நடந்தும் இருந்தமை சர்ச்சைக்குரிய விவகாரமாகத்தான் இருக்கின்றது.
கடற்படைத் தளபதி சீருடையில் இல்லாமல் அரைக் காற்சட்டையுடன் இருப்பது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகின்றது.
வடக்கில் இரு கடற் படையினர் மற்றும் பொலிசார் தாக்கப்பட்ட போது இராணுவத்தினரைக் களம் இறக்காத அரசாங்கம் எதற்காக ஹம்பாந்தோட்டையில் கடற் படையினரைக் களம் இறக்கியது எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்கச.
இந்தக் கேள்விக்கான பதில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தில் அடங்கியிருந்தது.
கடற் படைத் தளபதி சிவில் உடையில் இருக்கவில்லை எனவும் அவர் அணிந்திருந்தது மரைன் பைலட் எனப்படும் கப்பல்களுக்கு வழி காட்டுபவர்கள் அணியும் சீருடை என்றும் சரத் பொன்சேகா கூறியிருந்தார்.
கடற்படையில் உள்ள இரண்டு மரைன் பைலட்களில் கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவும் ஒருவர் என்பது சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் போராட்டத்திலே ஈடுபட்ட தொழிலாளர்கள் துறைமுக வாசலில் போராட்டத்தை நடத்தியிருந்தால் பொலிசாரைக் கொண்டு அரசாங்கம் நிலைமையினைச் சமாளித்திருக்க முடியும்.
ஆனால் தொழிலாளர்கள் துறைமுகத்துக்குள் கப்பல்கள் தரித்து நிற்கும் இறங்குதுறைப் பகுதியில் போராட்டம் நடத்தியிருந்தனர். தம்மீது நடவடிக்கை எடுத்தால் கடலில் குதிப்போம் என்று மிரட்டியிருந்தனர். அதனை விட இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களைத் தடுத்து வைத்திருந்தனர். அவற்றின் மீது துறைமுகத்தில் பயன்படுத்தும் இரண்டு இராட்சத பாரம் தூக்கிகளை இறக்கிவிட்டு கப்பல்கள் நகர விடாமல் செய்திருந்தனர்.
துறைமுகத்தில் இருந்த மின் பிறப்பாக்கிகளையும் மின் விநியோகக் கட்டமைப்பையும் ஸ்கனர்கள் உள்ளிட்ட கருவிகளையும் செயற்பட முடியாதவாறு தொழிலாளர்கள் சேதப்படுத்தியிருந்தனர்.
இந்தக் கட்டத்தில் கடற் படையின் தலையீடு தவிர்க்க முடியாததாக மாறியிருந்தது.
கப்பல்களை விடுவிப்பதோ அவற்றை வெளியே அனுப்புவதோ பொலிசாரால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கையல்ல. அதை விட கப்பல்கள் பணயம் வைக்கப்படும் சம்பவங்களைக் கையாள்வதற்கு படையினருக்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை வந்த அமெரிக்க கடற் படைக் கப்பல்களில் வந்த மரைன் படையினருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து கப்பல்களை மீட்கும் நடவடிக்கைக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டிருந்தது.
அது மாத்திரமன்றி கப்பல்களை மீட்டு அவற்றைத் துறைமுகத்திற்கு வெளியே பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. துறைமுகத்தில் பணியாற்றும் கப்பல்களுக்கு வழி காட்டும் டக் படகுகளின் டக் மாஸ்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் கடற்படைத் தளபதி கப்பலை விடுவித்து பாதுகாப்பாகத் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு செல்லும் மரைன் பைலட்டுக்குரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
கடற்படைத் தளபதியின் இந்த நடவடிக்கை மூலம் அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பியுள்ளது. அதனால்தான் கடற்படைத் தளபதியை அரசாங்கம் பாதுகாக்க முயற்சிக்கின்றது.
எவ்வாறாயினும் ஊடகவியலாளருக்கு எதிரான அவரது செயற்பாடுகளை அரசாங்கம் அங்கீகரிப்பது சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கும்.
கடற்படையினது சிறப்பு கொமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்தை மீறிச் சென்று வீடியோ எடுத்ததால்தான் கடற்படைத் தளபதி ஆவேசமாக நடந்து கொண்டார் என்று கூறப்படும் நியாயமும் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.
கடற்படைத் தளபதி விடயத்தில் எழுந்திருக்கும் சர்ச்சைகள் அரசாங்கத்திற்கு இரு பக்க நெருக்கடியைக் கொடுப்பதாகவே இருக்கின்றது. எதிரணியினர் இந்த விடயத்தை தொடர்ச்சியாக தூண்டி விட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதால் இந்த விடயம் இப்போதைக்கு முடிவுக்கு வராது.
அதே வேளை கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களுக்கு முக்கியமானவர்.
அமெரிக்காவிற்கு அண்மையில் மேற்கொண்ட பயணம், அமெரிக்க கடற்படையுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளமை, சர்வதேச கடற் பாதை பாதுகாப்பில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில் கடற் படையைத் தயார்படுத்தும் தலைமைத்துவம், கடற் படையில் புதிதாக மரைன் படைப் பிரிவை உருவாக்கியுள்ளமை போன்ற விடயங்களில் கடற் படைத் தளபதியின் திறமைகள் ஒரு புறம் இருக்க மறு புறம் ஊடகவியலாளரை அச்சுறுத்திய சம்பவம் இவர் மீதான கறையாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் அரசாங்கம் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகிறது. ஊடகங்களைத் திருப்திப்படுத்துவதற்காக கடற்படைத் தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகிறதா? கடற் படையின் ஆதரவுக்காக ஊடகங்களின் ஆதரவை இழக்கப் போகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.