ஈழத்திலும் சிரியா உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெற்றுவரும் போரில் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள் நடந்து கொண்ட விதமானது ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் குறித்தும் அதன் உண்மைத் தன்மை குறித்தும் சிந்திக்க தூண்டியுள்ளது.
வரலாற்றில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உருவாக்கம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையானது தனது உருவாக்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றத் தவறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளை போன்று இனிவரும் காலங்களிலும் மனித உயிர்களை அழிப்பதற்கு இடமளிக்க கூடாது.
அவ்வாறு மனித உயிர்கள் அழிக்கப்படும் நிலை உருவாகினால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு தன்னிடம் உள்ள சகல பொறிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடுகளுக்கு அமைய உருவாக்கம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் அனைத்தும் இன்று அதனை மறந்து செயற்படுகின்றன.
உலக நாடுகளின் வல்லாதிக்க சக்திகளின் அரசியல் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையானது தனது உருவாக்கத்தின் நோக்கத்தில் இருந்து முற்றாக விலகிச் செல்வதை கடந்த கால செயற்பாடுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.
உலகில் நடைபெறுகின்ற யுத்தத்தின் ஊடாக நன்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்ற யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மனிதப் பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்தும் அதனை தடுக்க முனையாது அல்லது
தடுக்கமுடியாது இருந்துவிட்டு மனித பேரழிவுகள் நடைபெற்று முடிந்தவுடன் அங்கு சென்று அது எவ்வாறு நடைபெற்றது.
அந்த அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் யார்? என்று விசாரணை செய்வதனால் என்ன பயன் குறித்த விசாரணைகள் இழந்த மனித உயிர்களை திரும்ப பெற்றுக்கொடுக்குமா? என்ற ஆதங்கங்கள் ஐ.நாவின் உருவாக்கத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த செயற்பாடுகள் ஒரு மரண விசாரணை அதிகாரியின் செயற்பாட்டை போன்றதாகவே உள்ளது.
மரணம் நடைபெறுவதை தடுக்கவேண்டிய ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் எல்லாம் மனிதப் பிணக்குவியலுக்கு முன்னால் நின்று அது எவ்வாறு ஏற்பட்டது.
அதனை ஏற்படுத்தியவர்கள் யார் என்று விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர அந்த மனித உயிர்களை காப்பாற்ற தவறிவிடுகின்றனர் என்பதே இன்று உலகம் முழுவதும் உள்ள மனிதநேயப் பணியாளர்களின் கவலையாக உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது யுத்தகளத்தில் இருந்து ஐ.நா அமைப்புக்கள் அனைத்தும் வெளியேற முடிவெடுத்த போது அங்கிருந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தங்களை விட்டு விட்டு ஐ.நா அமைப்புக்கள் வெளியேறக் கூடாது.
ஐ.நா அமைப்புக்கள் வெளியேறினால் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை எங்களை யுத்தம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் கொன்று குவித்துவிடும் என்று கதரியழுது
அவர்களை ஐ.நா பிரதிநிதிகளை தடுத்து நிறுத்திய போதும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஐ.நா வன்னி போர்க்களத்தை விட்டு வெளியேரியிருந்தது.
அதன் பின்னர் இலங்கையின் இறுதி யுத்தத்தில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
உலக போர் ஒழுக்க நெறிகளையெல்லாம் மீறி மிகப்பெரிய மனிதப் படுகொலைகள் மிகச் சாதாரணமாக இலங்கையில் நடைபெற்றபோது வாய் மூடி கண்ணை இறுக்க கட்டிக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின்
மனிதநேய அமைப்புக்கள் எல்லாம் யுத்தம் நிறைவடைந்து தமிழர்களின் பினங்கள் குவிக்கப்பட்டபோது மீண்டும் வந்து தங்களது மரண விசாரணைகளை ஆரம்பித்திருந்தார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் மரண விசாரணை கடந்த ஏழு வருடங்களாக இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இன்னும் அங்கு கொத்துக் கொத்தாக உயிரிழந்த மக்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இதேபோன்ற இந்த நிலை தற்போது சிறியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது சிறியாவின் அலோப் நகரில் இருந்து வரும் காட்சிகளை பார்க்கும்போது மனிதநேயம் உள்ளவர்களின் நெஞ்சங்கள் எல்லாம் பரிதவிக்கின்றது.
உலகத்தில் எந்த இனத்திற்கும் இப்படியான அவல நிலை வரக் கூடாது என்பதே ஈழத்தமிழர்களின் உறுதியான நிலைப்பாடு.
ஈழத்தில் இருந்து வந்த புகைப்படங்களும் சிறியாவின் அலோப் நகரில் இருந்து வரும் புகைப்படங்களும் ஐ.நா மன்றத்தின் மனசாட்சிகளை தட்டவில்லையா? என்பதே இன்று பலரின் கேள்விகளாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு செய்யப்படவேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்தி நிற்கின்றது.
மரணங்களை தடுக்க கூடிய ஆளுமை கொண்ட ஒரு ஐ.நா மன்றமே இனி உலகிற்கு தேவை மனிதவுரிமை விசாரணை என்ற பெயரில் மரணங்களை விசாரணை செய்யும் ஒரு அமைப்பு உலகிற்கு தேவையில்லை.
மனிதப் பேரழிவை தடுப்பதற்கான ஒரு திடமான பொறிமுறையை ஐ.நா உருவாக்கத் தவறுமாக இருந்தால் உலகின் அழிவை யாராளும் தடுத்து நிறுத்த முடியாமல் போகும்.