“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் கீழ் பிரதமராக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எண்ணுகிறார்.”
– இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சமூகத்தில் கொரோனா நோயாளிகள் மீண்டும் தோன்றி பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைய வேண்டும், வேலைவாய்ப்பின்மை உருவாக வேண்டும், மக்கள் பட்டினியில் வாழ வேண்டும் என்பதுவே எதிர்க்கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.
ஆனால், நாம் எதிர்க்கட்சியினரின் தேவையை நிறைவேற்றுவதற்கன்றி இந்நாட்டில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்காகவே பணி செய்கின்றோம்.
இன்று எதிர்க்கட்சியினரின் போராட்டம் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல கட்சிக்குள்ளேயே உள்ளது. யார் அதிக ஆசனங்களை வெல்வது என்ற போட்டியுள்ளது. இன்று சஜித் பிரேமதாஸவுக்கு சிறிகொத்தவின் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. தன்னை ஜனாதிபதியாக எண்ணியே ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இன்று தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பிரதமராக வர சஜித் பிரேமதாஸ எண்ணுகின்றார். அவர் இன்று வேறாக தேர்தலில் போட்டியிட்டாலும் அக்கட்சியின் முக்கியமானவர்கள் விலகியுள்ளார்கள்.
அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 05ம் திகதி தேர்தலின் பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவார்கள்” – என்றார்.