ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை அணுகியதாக கூறப்பட்டது. பின், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. வடிவேலு அப்போதைக்கு நடிப்பில் இருந்து விலகி இருந்ததாலும், ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதனால்தான் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது காமெடியனாக விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி சண்டை’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள வடிவேலு, தான் ஏன் லிங்கா படத்தில் நடிக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘லிங்கா’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும். அதனால்தான் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், நான் நடித்துள்ள ‘கத்தி சண்டை’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் அழகாக வந்துள்ளது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை குளோபர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியிடுகிறது.