அறுபத்து மூன்று நாயன்மார்களில் குங்கிலியக் கலயநாயனார் மற்றும் காரிநாயனார் ஆகியோர் வாழ்ந்த ஊர் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கு நறுமணம் மிக்க குங்கிலியத் தூபத்தை நாள்தோறும் இடுவதே குங்கிலியக் கலய நாயனாரின் பணியாகும். இதற்காக தன் சொத்துக்களையெல்லாம் இழந்தார்.
வறுமையில் வாடியபோது, மனைவியின் மாங்கல்யத்தை விற்று அரிசி வாங்கச் சென்றவர், அரிசிக்கு பதிலாக குங்கிலியம் வாங்கி இறைவனுக்கு தொண்டு செய்தவர். இவரின் தூய பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்த குபேரன், இவர் வீடு முழுக்க செல்வங்களை நிறைத்தான். அப்போதும் சிவத்தொண்டனை மறக்காமல் செய்தவர் குங்கிலியக் கலய நாயனார்.
திருப்பனந்தாள் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம், ஒரு பெண்ணிற்காக தலை சாய்ந்தது. அந்த லிங்கத் திருமேனியை நிமிர்த்துவதற்காக, அந்தப் பகுதியை ஆண்ட மன்னன், பல யானைகளை வைத்து முயற்சித்தான். ஆனால் பலனில்லை. இந்த நிலையில் திருப்பனந்தாள் வந்த குங்கிலியக் கலய நாயனார், தன் கழுத்திலும், சிவலிங்கத்திலும் கயிறு கட்டி, லிங்கத் திருமேனியை நேர் செய்தார்.
காரி நாயனாரும் இத்தலத்தில் வாழ்ந்தவர் ஆவார். இவர் காரிக்கோவை இயற்றியவர். தன் சொற்பொழிவால் மூவேந்தர்களிடமும் செல்வம் பெற்று, அதனைக் கொண்டு பல்வேறு சிவாலயங்களை எழுப்பியவர். சிவனடியார்களுக்குப் பொருளுதவி செய்தவர். இறுதி நாளில் வடகயிலைச் சென்றவர்.