பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.
வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.
கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.
சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது.
அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.
ஸ்ட்ரெச் மார்க் மறைய…
கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும்.
சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.
சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது.
குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும்.
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம். நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.
ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.