2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் பிக்சிங் மூலம் வென்றதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு அந்நாட்டு வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் பங்கேற்ற கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா.
ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி மேட்ச் பிக்சிங்கால் கோப்பையை வென்றது என்றும் இந்தியாவிற்கு உலகக்கோப்பை விற்கப்பட்டது என்றும் அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்றும், ஆனால் வேறு சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களான குமார சங்ககரா, மஹேல ஜெயர்தனே ஆகியோர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள் என அந்த இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஜெயவர்தனே கிண்டலடித்துள்ளார்.
ஆதாரம் இருந்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுங்கள் என்று அப்போதைய அணியின் கேப்டன் குமார சங்ககரா தெரிவித்துள்ளார். இது சச்சின் டெண்டுல்கரை களங்கப்படுத்தும் செயல் என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி இந்த களங்கத்தை போக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான அரவிந்த் டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். பொய் சொல்லித் திரிபவர்களை விட்டுவிடக் கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.
குற்றம்சாட்டிய மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேட்ச் பிக்சிங் புகார் பற்றி விசாரிக்க இலங்கை விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் இந்திய கிரிக்கெட் வாரியமோ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ அதிகாரபூர்வமாக இது தொடர்பில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.