உலகில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்றால், அதை பயன்படுத்துவதாக இல்லை என இத்தாலிய மக்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் இந்த விவகாரம் தொடர்பில் சுமார் ஆயிரம் பொதுமக்களிடம் முன்வைக்கப்பட்ட இந்த ஆய்வில் 41 சதவீத மக்கள் தடுப்பு மருந்து தேவையில்லை என பதிலளித்துள்ளனர்.
அதாவது இத்தாலியர்களில் பத்தில் நான்கு பேர் தங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை என்ற முடிவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் 59 சதவீத மக்கள் தடுப்பு மருந்து கண்டிப்பாக பயன்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா பரவல் பல ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், தடுப்பு மருந்து பயன்படுத்துவதே ஒரே ஒரு தீர்வு என நிபுணர்கள் பரிந்துரைத்துவரும் நிலையில், இத்தாலிய மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களும் முதியவர்களுமே தடுப்பு மருந்து பயன்பாட்டை ஆதரித்தவர்கள். ஆனால் 35 முதல் 48 வயதினரே, தடுப்பு மருந்து பயன்பாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை அடுத்து, தடுப்பு மருந்தின் தேவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. இந்த நிலையில் இத்தாலியின் பெரும்பகுதி மக்கள் தடுப்பு மருந்துக்கு எதிரான மன நிலையில் இருப்பது அதிகாரிகள் தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது.