நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருகின்றதெனவும், ஏனைய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதெனவும் அரச அச்சகர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்துக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 13 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலனறுவை, இரத்தினபுரி, கேகாலை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளே ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மற்றும் மொனராகலை தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும், வன்னி தேர்தல் மாவட்டங்களுக்குரிய வாக்காளர் அட்டைகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.