பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 14ம் தேதி தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாலிவுட்டில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திறமையானவர்களை ஒதுக்கி வைப்பது தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெபடிசம் அதாவது வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கூறியிருப்பதாவது,
ஸ்டார்களின் பிள்ளைகளுக்கு திரையுலகில் அறிமுகம் கிடைப்பது எளிது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் வாரிசு நடிகர் என்பதாலேயே தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்பதில் உண்மை இல்லை.
தங்கள் வாரிசுகளை ஸ்டார்கள் திரைத்துறையில் அறிமுகம் செய்து வைப்பது இயல்பானது.
நல்ல அறிமுகம் கிடைக்கச் செய்து, ஆதரவு அளிப்பது மட்டும் வாரிசுகளுக்கு உதவாது. பல வாரிசுகள் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சரியான ஆட்கள் இருந்து அவரை வழிநடத்தாதது தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
உலகம் முழுவதும் அறியப்படும் தோனியாக நடிக்க சுஷாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக அவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் ஆட்கள் இருக்கத் தான் செய்வார்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக நடித்ததை பார்த்து சிலர் சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரம் ஏன் நமக்கு கிடைக்கவில்லை, அவருக்கு எப்படி கிடைத்தது என்று எல்லாம் நினைக்கும் ஆட்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
தோனி போன்ற கதாபாத்திரம் கிடைத்த பிறகு மக்கள் விமர்சிப்பதும், பொறாமைப்படுவதும் நடக்கத் தான் செய்யும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். மேலும் இது போன்ற நெகட்டிவிட்டியை சமாளிக்க அவர் மனதளவில் தயாராகியிருந்திருக்க வேண்டும்.
நெகட்டிவிட்டியை எதிர்பார்க்காததாலும், இது குறித்து எச்சரிக்க ஆள் இல்லாததாலும் தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.