இலங்கையில் போர் குற்றங்கள் நடந்ததாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே முதலில் கூறியதாகவும் எனினும் கருணா அம்மான் அவ்வாறான போர் குற்றங்கள் நடைபெறவில்லை எனக் கூறி நாட்டுக்காக சாட்சியமளிக்க முன்வந்தார் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ நாங்கள் போர் குறித்த நிபுணர்கள் அல்ல. யுத்தம் ஒன்று நடைபெறும் போது எதிரிபடைகளை அழிக்க எமது நாட்டின் இராணுவ பிரதானிகள் கருணா அம்மானின் உதவியை பெற்றுக்கொண்டனர். எதிரியின் முகாமுக்குள் இருந்தே அவர்களை அழிக்க தேவையான பின்னணியை நாம் உருவாக்கிக்கொண்டோம்.
போர் முடிந்த பின்னர் இலங்கையில் போர் குற்றங்கள் நடந்ததாக கூறி தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டது. எனினும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் இலங்கையில் போர் குற்றம் நடந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே தெரிவித்திருந்தார்.
எனினும் தருஸ்மனின் அறிக்கை வெளியிடப்பட்ட போது இலங்கை இராணுவத்தினர் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை என கருணா அம்மான் கூறினார். அதேபோல் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனினும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது நடந்த சம்பவம் குறித்து தற்போது வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சட்டத்திடம் விட்டு விடுவோம். அவர்கள் அவர் குறித்து விசாரணை நடத்துவார்கள்” எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.